தன் எழுத்தை ஆயுதமாக்கிப் பயணித்தவர் இணுவையூர் சிதம்பர திருச்செந்திநாதன்

நமது ஈழமண்ணில் ஏராளமான எழுத்தாளர்கள் தோன்றி மறைந்தாலும் தம் எழுத்தால் சமூக நன்மைகளை விளைவித்தவர்கள் மிகச் சிலரே. அத்தகைய மகோன்னதமான மனிதர்களுள் மறைந்த எழுத்தாளர் இணுவையூர் சிதம்பர திருச்செந்திநாதன் முக்கியமானவர். தமிழ் இனம் விடுதலைக்கான குரலை உயர்த்திய போது ஒவ்வொருவரும் தத்தமது நிலைப்பட்டு விடுதலைப்பயணத்தில் இணைந்து கொண்டார்கள். அதில் அமரர் இணுவையூர் சிதம்பர் திருச்செந்திநாதன் போராட்டம் வலுப்பெற்ற காலகட்டத்தில் எழுத்திலக்கியத் துறையில் ஒரு கதைசொல்லியாக மட்டுமன்றி கருத்துருவாக்கம் செய்யும் இலக்கிய ஆளுமையாகவும் தன்னை நிலைநிறுத்தி செயற்பட்டார். அரச ஊழியராகப் பணிபுரிந்து கொண்டு அவ் அரசுக்கு எதிராக அவ் அரசினால் இழைக்கப்படும் அநீதிகளை தன் எழுத்துக்களால் கண்டிக்கும் அறச்சீற்றம் கொண்ட அற்புதமான மனிதராக அவர் அடையாளம் காணப்பட்டார். போராட்ட காலப்பகுதியில் வெளிவந்த பல சிறுசஞ்சிகைகளில் ஆசிரிய குழுமத்திலும் ஆலோசனை குழுமத்திலும் ஒருவராக இயங்கியது மட்டுமன்றி அச் சிறுசஞ்சிகைகள் மூலமாக பெரும் மானுட வேணவாவையும் அவலத்தையும் ஆவணமாக்கிய பெருமை அமரர்குரியது.
அவரது சிறப்பியல்புகளில் ஒன்று தனது வழியில் தடம் தொடரத்தக்க இளைய இலக்கிய கர்த்தாக்களைக் கொண்ட படையணியொன்றை உருவாக்கியமையாகும். அவரது இலக்கிய உலகின் புத்திரர்களாக இன்று பலர் இயங்குவதைக் காணும் போது அவரது ஆளுமையின் கனதியை உணரக்கூடியதாகவிருக்கின்றது. ஒரு காலத்தில் இலங்கை அரச ஊழியர்கள் மட்டத்தில் அதுவும் உயர்மட்ட நிர்வாகிகள் மட்டத்தில் ஏராளமான இலக்கிய கர்த்தாக்கள் தமிழ் படைப்பிலக்கியத்துறையில் இருந்தனர். அத்தகைய அணியின் தொடர்ச்சியின் ஒரு வேராகவும் விழுதாகவும் நினைக்கத்தக்கவர் அமரர் இணுவையூர் சிதம்பர திருச்செந்திநாதன்.
அமைதியான சுபாவம் கொண்ட மனிதராக அடையாளப்படுத்தப்பட்ட அவர் எழுத்துக்கள் அமைதியானவையல்ல. பாதிக்கப்பட்ட மக்களில் குரலாக ஒலித்த எழுத்தாயுதங்கள் அவரது படைப்புக்கள். தன் ஆரம்ப காலங்களில் தேசியப் பத்திரிகைகளில் பத்தி எழுத்தாளராகவும் பேட்டி காண்பவராகவும் தன் ஏழுத்திலக்கிய உலகின் பிரவேசத்தை ஆரம்பித்தவர் பின் நாளில் ஒரு பெரும் தேசியப் போராட்டத்தின் நியாயங்களைச் சொன்ன புரட்சிமிக்க எழுத்தாளர்களுள் ஒருவராக வாழ்ந்து மறைந்திருக்கின்றார்.
போர் பற்றி போருக்கு வெளியே நின்று எழுதிப் புகழ்பெற்றவர்கள் பலர் இன்று உள்ளனர். ஆனால் போருக்குள்ளேயே வாழ்ந்து போரின் அவலங்களை தானும் சுமந்து போர் துரத்திய போதெல்லாம் தன் குடும்பத்துடன் இடம்பெயர்ந்து இறுதிப் போரின் போதும் அதன் அவலங்களை தரிசித்து ஞாபகத்தரிசனங்களின் நினைவுப் பெறுமதிகளின் பொக்கிசமாக வாழ்ந்து மடிந்தவர் அமரர் அவர்கள்.

ஓர் எழுத்தாளர் எனும் அவரது ஆளுமை அடையாளத்துக்கு அப்பால் ஒரு கண்டிப்பான அரச அதிகாரியாகவும் அவர் பதித்த தடங்கள் ஏராளமானவை. பொருளாதார நெருக்கடிகளால் பொது மக்கள் அவலப்பட்ட போது தனது அரச பணியின் ஊடாக அவர் ஆற்றிய கருமங்கள் ஏராளமானவை.

அது போன்றே தான் இடம்பெயரும் போது தனது கட்டுப்பாட்டின் கீழிருந்த அரச ஆவணங்களையும் குறிப்பாக தனிநபர் கோவைகளையும் காவித்திரிந்த மனிதர் அவர். அவரது தன்னலம் கருதாச் சேவையினால் பயன்பெற்றவர்கள் பலர்.
இளைப்பாறும் காலத்தில் கணவனும் மனைவியுமாக தெல்லிப்பளை பிரதேச செயலகத்தில் நிர்வாக உத்தியோகத்தராகவும் தலமை முகாமைத்துவ உதவியாளராகவும் இணைந்து பணியாற்றி மீளக்குடியேறிய மக்களின் பிரச்சனைகளை தீர்க்கும் கருமத்தில் தம்மை இணைத்தமை நினைவுக்குரியது.
அவரை அறிந்தவர்களுக்கு நன்கு தெரியும் அவரது தீராத இலக்கியப்பசி. போரின் தாக்ககத்திலிருந்து மீண்டு வந்தபோதும் அவர் தனது இலக்கியப் பசியில் அமைதிபெறவில்லை. தன்னை பின்தொடரும் இளையவர்களை அணிசேர்த்து தளவாசல் என்கின்ற சிறுசஞ்சிகையை ஆரம்பித்ததுடன் ஊடகப் பரப்புக்களிலும் கனதியான இன்றைய தலைமுறைக்கு எடுத்துக்காட்டான பல படைப்புக்களை உருவாக்கியிருந்தார்.
இன்று அமரர் இணுவையூர் சிதம்பர திருச்செந்திநாதன் நம்மோடு இல்லை என்பது வெறும் வார்த்தைகளேயன்றி உண்மைகள் இல்லை. அவரது எழுத்துக்களும் அவரால் உருவாக்கபட்ட எழுத்தாளர்களின் எழுத்துக்களும் இவ்வுலகில் உள்ளவரை அவர் வாழ்வார். அவரது நாமம் ஈழத்து இலக்கியத் துறையை காய்தல் உவத்தல் இன்றி காமுறுவோர் நெஞ்சத்தில் என்றும் நிலைத்து நிற்கும் என்பதில் ஐயமில்லை. அமரரது பிரிவு ஈழத்து இலக்கியத்துறைக்கு பெரும் இடைவெளி என்பதுடன் தாயை இழந்து குறுகிய காலத்துக்குள் தந்தையையுமிழந்த அவரது பிள்ளைகளுக்கு பேரிழப்பாகும். அவரது ஆத்மா சாந்தியடையப் பிரார்த்திப்பதுடன் யாழ்ப்பாணத் தமிழ்ச் சங்கம் சார்பில் எங்;கள் ஆஞ்சலிகளையும் செலுத்தி நிற்கின்றோம்.

Bookmark the permalink.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*