இனம் மதம் மொழி கடந்து ஒன்றிணைந்து வன்முறைக் கலாசாரத்தை ஒழிப்போம்

கிறிஸ்தவ மக்களின் புனித வழிபாட்டுக்குரிய நாளான ஈஸ்டர் நாளில் நாட்டில் ஏற்பட்ட அனர்த்தம் மனித நேயம் கொண்ட அனைவரினது இதயத்தையும் சுக்குநூறாக்கியுள்ளது. மனஅமைதி வேண்டி வாழ்வில் செழுமை வேண்டி இறைபிரார்த்தனையில் ஈடுபட்ட வேளை நடைபெற்ற குண்டுத்தாக்குதல்களினால் உறவுகளைத் தொலைத்து அல்லறும் அப்பாவிகளின் இடத்தில் எம்மை வைத்து உணரும் போது இதயத்தின் வேதனை இன்னும் இரட்டிப்பாகின்றது. ஏனோ தெரியவில்லை இலங்கை தேசத்தில் ஏப்பிரல் மே மாதங்கள் கடந்த சில வருடங்களாக பெரும் அனர்த்தங்கள் இடம்பெறும் மாதங்களாக மாறிவருகின்றன. இயற்கை அனர்த்தங்களால் ஏற்படும் நெருக்கடிகள் தாண்டி நீண்ட இடைவெளிக்குப் பின்னர் மனித செயற்பாடுகளினால் விளைந்த கொடூரத்தால் பலநூறு உயிர்கள் காவுகொள்ளப்பட்டுள்ளன.

அழகிய நமது தேசத்தின் வனப்பை இரசிக்க வருகைதந்த வெளிநாட்டவர்கள் பலரும் இக் கொடூரத்தில் கொல்லப்பட்டமை நமது நாட்டை அச்சத்துக்குரிய பிரதேசமாக உலக அரங்கில் மாற்றுவது இலங்கை வாழ் மக்கள் அனைவருக்கும் இன்னல் தரும் விடயமாகும். இயற்கை வளமும் ஏனைய நாடுகளின் நட்பும் இயல்பாகக் கொண்ட நமது நாடு இமயத்தின் எல்லையையும் இலகுவாக தொடமுடியும். இருந்தும் காலத்துக்குகாலம் ஏற்படும் பிற்போக்குத்தனமான வன்முறைகளினால் தொடர்ச்சியாக அழிவைச் சந்தித்து வரும் அழகிய இத் தீவு அமைதியிழந்து போவது குடிமக்கள் அனைவருக்கும் ஆபத்தானது.

அதற்கும் அப்பால் ஒரு சில தீவிரப்போக்குக் கொண்ட வன்முறையாளர்களினால் ஒரு ஒட்டுமொத்த இனக் குழுமத்தின் மீதும் ஏனையவர்களுக்கு வெறுப்புணர்வு ஏற்படும் இயல்பை கடந்து செல்வது என்பதும் இலகுவில் முடியக்கூடிய காரியமில்லை. இது நீண்ட தீர்க்க முடியாத வன்மங்களுக்கு வழி செய்து விடும். எனவே ஆளுமையும் ஆற்றலும் கொண்ட நமது அரசியல் தலைவர்கள் தற்போதைய நெருக்கடியை நாட்டின் நன்மை கருதி மிகவும் சாணக்கியமாக அணுக வேண்டியது அவசியமானது. இதனை யாழ்ப்பாணத் தமிழ்ச் சங்கத்தின் வேண்டுகோளாக முன்வைக்கின்றோம்.

கெர்டூரத் தாக்குதலினால் கொல்லப்பட்ட அத்தனை உறவுகளின் ஆத்மா அமைதியடையவும் காயப்பட்டவர்கள் விரைவில் நலம்பெறவும் உறவுகளை இழந்தவர்கள் தேறுதல் அடையவும் இறைவனைப் பிரார்த்திக்கின்றோம். உலகம் வாழ் தமிழ்ச் சமூகத்தின் சார்பில் இவ்வாறான சம்பவங்களை வன்மையாக கண்டிப்பதுடன் பாதிக்கப்பட்ட அனைத்து உறவுகளின் துயரிலும் பங்கெடுத்துக்கொள்கின்றோம்.

பொதுப் பகை வெல்ல உட்பகை களைந்து ஒன்றிணைவோம்.

யாழ்ப்பாணத் தமிழ்ச் சங்கம் 

Bookmark the permalink.

Leave a Reply