அளவெட்டிப் பண்டிதர் க. நாகலிங்கம்

Pandithar-K.-Nagalingam-பண்டிதர் க.நாகலிங்கம் அவர்கள் அளவெட்டியில் வாழ்ந்த கனகர் சின்னப்பிள்ளை தம்பதிக்கு ஏக புதல்வனாக 1920 ஆம் ஆண்டு மார்ச் நாலாந்தேதி பிறந்தார். இவருக்குப் பின்னே தங்கையாக ஒருவர் தோன்றியதுண்டு. தாய் தந்தையருடன் பண்டிதரும் தங்கையுமாக நால்வர் சேர்ந்ததே இவர்கள் சிறிய குடும்பமாகும்.

பண்டிதர் அளவெட்டி வடக்கு சீனன் கலட்டி ஞானோதயா வித்தியாலயத்தில் ஆரம்பக் கல்வியைத் தொடரும் படியாகச் சேர்க்கப்பட்டார். அங்கு நான்காவது வரை கற்றவர் தொடர்ந்து ஆங்கில மொழிக் கல்வியைப் பெற விரும்பி அளவெட்டி ஆங்கிலப் பாடசாலையிற் சேர்க்கப்பட்டார். அங்கு ஐந்தாம் வகுப்பிற் கற்றுக் கொண்டிருக்கும் போது நோய் வாய்ப்பட்டு பல மாதங்கள் பாடசாலைக்குச் செல்ல முடியாதிருந்தார். தமிழ்ப் பாடசாலையிலே இவர் வளர்ச்சியை அவதானித்திருந்த அப்பாடசாலை ஆசிரியர் இரத்தினசாமி ஐயர் பண்டிதரின் பெற்றோரைச் சந்தித்துப் பிள்ளைளை ஞானோதயாவிற்கு திருப்பி அனுப்புங்கள் அவன் தமிழ்மொழி கற்று உயர்ந்து விளங்குவான் என்று சொல்லிப் பண்டிதரை ஞானோதயாவிற்கு கொண்டு செல்ல முயற்சித்தார். முயற்சியில் வெற்றியுங் கண்டார். இரத்தினசாமி ஐயர் உபாத்தியாரின் மாணவனாகிய நாகலிங்கத்தை எல்லா ஆசிரியர்களும் அன்புடன் கவனிக்கத் தொடங்கினார். இரத்தினசாமி ஐயர் குறிப்பிட்டது போல மாணவனிடத்தும் வளர்ச்சி காணப்பட்டது. சீனன் கலட்டி ஞானோதயாவில் ஆறாம் வகுப்பிற் சேர்க்கப்பட்ட மாணவன் நல்ல முன்னேற்றத்துடன் எல்லோரதும் அன்பிற்கும் பாத்திரமானார். 1938 இல் அந்த வேளையில் சிரேஷ்ர பாடசாலைத் தராதரப் பத்திரப் பரீட்சையில் சித்தி பெற்றார். அந்த வித்தியாலய ஆசிரியர்களான அருணாசலம், இரத்தினசாமி ஐயர் என்போரிடம் பிரத்தியோகமாகக் கற்றுப் பாலபண்டிதப் பரீட்சைக்குத் தோற்றுவதற்குத் தம்மைத் தயார்படுத்திக் கொண்டிருந்தார். பரமேஸ்வரக் கல்லூரியில் நடைபெறும் பண்டித ஆசிரியர் பயிற்சிக்காக மாணவர்களைச் சேர்க்கும் 1939 ஆம் ஆண்டிற்கான புகுமுகப் பரீட்சைக்கு விண்ணப்பம் அந்த வேளை கோரப்பட்டது. இந்த ஆசிரிய கலாசாலை அந்த வேளை அரசாங்க சபை உறுப்பினராக இருந்த சு. நடேசப்பிள்ளை அவர்களின் பெருமுயற்சியால் 1936 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. இப் பயிற்சிக் கலாசாலையில் மூன்று வருடங்கள் பயில வேண்டும். இந்த மூன்று வருடங்களுள் பண்டித பரீட்சையிலும் பயிற்றப்பட்ட ஆசிரியர் தராதரப் பரீட்சையிலும் சித்தி எய்த வேண்டும் என்ற நியதி இருந்தது. பண்டித பரீட்சையில் தேர்ச்சி பெறாதோர் ஆசிரியர் பயிற்சி சான்றிதழைப் பெற முடியாது. மூன்றாண்டுகள் படித்துப் பண்டிதப் பரீட்சையில் சித்தி எய்துவதே கடினம். எனவே பிரவேச, பாலபண்டிதப் பரீட்சைகளில் சித்தி எய்தியவர்களே இந்தப் பயிற்சிக் கலாசாலைக்கு விண்ணப்பிப்பது வழக்கம். பண்டிதர் நாகலிங்கம் பிரவேச பரீட்சைத் தராதரப் பத்திரமோ பாலபண்டிதப் பரீட்சை தராதரப் பத்திரமோ பெற்றிருக்காத நிலையிலும் இப்பயிற்சிக் கலாசாலைப் பிரவேசத்திற்கு விண்ணப்பித்து எழுத்துப் பரீட்சையிலும் நேர்முகப் பரீட்சையிலும் தேர்ச்சி பெற்றுள்ளார். அந்த ஆண்டிலே தொவது 1939 ஆம் ஆண்டு புராட்டாதியிலே பயிற்சிக்காகச் சேர்த்துக் கொள்ளப்பட்டார்.

பண்டிதர் ஆசிரியர் பயிற்சிக்காக ஆசிரிய கலாசாலையில் முன்பாகவே 1936 இல் சேர்த்துக் கொள்ளப்பட்டு பரீட்சைகளும் நிறைவாகிப் பயனை எதிர்பார்த்துக் கொண்டிருந்த இருபத்து நான்கு மாணவர்களும் பண்டிதப் பரீட்சையில் சித்தி பெறவில்லை என்று அறிவிக்கப்பட்டிருந்தனர். இப்படியான பரீட்சை முடிபுகள் வெளிப்பாட்டிற்கு ஏதோ காரணம் இருக்க வேண்டும் என வெளியிற் பலரும் பேசிக் கொண்டனர். அந்த வேளை வெளியானவொரு துண்டுப்பிரசுரம் பரீட்சை முடிவு பற்றி வெளியே பேசிக் கொண்டவர்களது சிந்தனை சரிதான் என்று விளக்கம் செய்வது போன்றிருந்தது. இந்த இருபத்து நான்கு பேர்களதும் விடைத்தாள்கள் மீள் பரிசீலனைக்காக மதுரைத் தமிழ்ச் சங்கத்துக்கு அனுப்பப்பட்டு அவர்களுள் பதினாறு பேர் பதினாறு பேர் சித்தி பெற்றனர் என்பது குறிப்பிடப்படக்கூடியது. இந்த சம்பவத்தின் பின் பரமேஸ்வரா ஆசிரிய பயிற்சிக் கலாசாலை மாணவர்கள் யாரும் ஆரிய திராவிட பாஷாபி விருத்திச் சங்கப் பரீட்சைக்குத் தோற்றுவதில்லை என நிர்வாகம் தீர்மானித்தது. இந்த நிலையில் எங்கள் இந்த நூலாசிரியரைப் பரமேஸ்வரா ஆசிரியர் பயிற்சிக் கலாசாலைக்குச் செல்ல வேண்டாமென்று சிலர் தடுத்ததுண்டு ஆனால் ஆசிரியர் இரத்தின சாமி ஐயர் தடுத்தவர்களுக்கு மாறாக இந்தப் பயிற்சிக் கல்லூரிக்குத்தான் போக வேண்டுமென ஊக்கமளித்ததுண்டு. இனிமேல் மதுரை தமிழ்ச் சங்கப் பரீட்சைக்கே எல்லோரையுந் தோற்றச் செய்வதென்றும் பரமேஸ்வரா ஆசிரியர் பயிற்சிக் கலாசாலை நிர்வாகம் முடிவெடுத்துள்ளது என்று மாணவர்கள் அறிந்து திகைத்தனர். மதுரைத் தமிழ்ச் சங்கப் பரீட்சை தரங் கூடியதாயிற்றே என்று மாணவர்கள் தயங்கியதுண்டு. வகுப்புக்கள் தொடர்ந்து நடந்து கொண்டிருந்தன. பண்டிதர் பயிலும் வகுப்பு மாணவர்களில் பதின்மூவர் ஓராண்டு முன்னதாக மதுரைத் தமிழ்ச் சங்கப் பரீட்சைக்கே தோற்றினர். அத்தருணம் எங்கள் நூலாசிரியர் உட்பட ஒன்பது பேர் திறமைச் சித்தியடைந்து கல்லூரிக்குப் பேரும் புகழும் சம்பாதித்துக் கொடுத்தனர்.

பரமேஸ்வரா பண்டித ஆசிரிய கலாசாலை அதிபராகத் தலைமை தாங்கி நடத்தியவர் கலாநிதி கு. சிவப்பிரகாசம் அவர்கள். இவர் புலோலி வ. குமாரசுவாமிப் புலவரின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது. அளவெட்டி ச. சிதம்பரம்பிள்ளை வித்துவான் கார்த்திகேசு அதிபர் ஆகிய மூவருந்தான் பண்டித ஆசிரிய கலாசாலையின் ஆசிரியர்களாவர். புலவர்மணி பண்டிதமணி க.சு.நவநீதகிருஷ்ணபாரதியார் திரு. சு.நடேசபிள்ளை என்போரும் பயிற்சி மாணவருக்கு கற்பித்தோராவர். 1942 ஆம் ஆண்டு புரட்டாதியில் பண்டிதர் நாகலிங்கம் மதுரைத் தமிழ்ப் பண்டிதராகவும் பயிற்றப்பட்ட தமிழாசிரியர் ஆகவும் பரமேஸ்வரா பயிற்சிக் கல்லூரியை விட்டு வெளியேறினார்.

இவர் தன்னோடு பயின்றவர்களில் பத்திற்கு மேற்பட்டவர்களுக்கு கற்றலில் வழிகாட்டி அவர்கள் பண்டிதர்களாக உதவினார். கல்லூரி அதிபர் கு.சிவப்பிரகாசம் எங்கள் நூலாசிரியருக்கு வழங்கிய நற்சான்றிதழில் இந்தச் செய்தியை குறிப்பிட்டுள்ளார். இவர் அங்கு பயின்று கொண்டிருந்த போதே கல்லூரி அதிபர் சிவப்பிரகாசம் அவர்கள் பண்டித வகுப்பொன்றையும் புறம்பாக நடத்தி வந்தார். அந்தப் பண்டித வகுப்பிற்கு கற்பிக்கும் ஆசிரியர் எவரேனும் வகுப்பிற்கு வருகை தராத வேளை அவ்வகுப்பு இடையீடுபட்டுப் போகா வகை நிறைவு செய்ய எங்கள் பண்டிதரையே அதிபர் அழைப்பார். அந்த வகையிலும் பயிற்சிக்குள்ளானவர் பண்டிதர் நாகலிங்கம்.

ஆசிரிய கலாசாலையை விட்டு வெளியேறிய பின் திருநெல்வேலியில் தனியார் வீடொன்றில் பரமேஸ்வராக் கல்லூரி ஆசிரியர் ஞானப்பிரகாசம் அவர்கள் ஆரம்பித்து நடாத்திய பண்டித, பாலபண்டித வகுப்புக்களிற் கற்பிப்பதற்கு பண்டிதர் நாகலிங்கம். நியமிக்கப்பட்டார். அவ்வகுப்புக்களில் வித்துவான் கார்த்திகேசு, வித்துவான் வேந்தனார் முதலான தமிழறிஞர்களும் கற்பித்தனர். அவ்வகுப்புக்களிற் கற்ற பலர் இரண்டாண்டுகளுக்குள் விலகி ஆசிரிய கலாசாலையில் பயிற்சி பெறச் சென்றனர். அதனால் வகுப்புக்களை நிறுத்த வேண்டிய நிலை ஏற்பட்டது.

நீர்வேலிப் பண்டிதர் துரைசிங்கம் அவர்களுடனும் வைத்தீஸ்வர வித்தியாலய அதிபர் அம்பிகைபாகனுடனும் இணைந்து பண்டிதர் நாகலிங்கம். வைத்தீஸ்வரா வித்தியாலயத்தில் பண்டித, பாலபண்டித வகுப்புக்களை ஆரம்பித்தார். அத்தருணத்தில்தான் மல்லாத்தில் பண்டித பாலபண்டித வகுப்புக்களை பண்டிதர் பொன்னுத்துரை அவர்கள் ஆரம்பித்தார். அவ்வகுப்பிற் கற்பிப்பதற்கு எங்கள் நூலாசிரியருடன் இலக்கண வித்தகர் இ.நமசிவாயதேசிகர், இலக்கிய கலாநிதி பண்டிதமணி மு.கந்தையா,பண்டிதர் வ.நடராசா, வித்துவான் க.கந்தசாமி, சிவத்தமிழ்ச் செல்வி கலாநிதி பண்டிதர் தங்கம்மா அப்பாக்குட்டி முதலானோர் நியமனம் பெற்றனர். இந்த மல்லாகத்தில் ஆரம்பிக்கப்பட்ட வகுப்புக் காரணமாக வைத்தீஸ்வராவித்தியாலய வகுப்புத் தொடர்பை பண்டிதர் நாகலிங்கம் படிப்படியாக நிறுத்திக் கொண்டார்.

இவர் தம் மாணவர்களுக்காகிய பாடசாலைக் கல்விப் பணியை அளவெட்டி சதானந்த வித்தியாலயத்தில் ஆரம்பித்தார். தொடர்ந்து எட்டாண்டுகள் அங்கேயே கற்பித்தார். இந்த வேளையில் இலங்கைப் பல்கலைக்கழகம் நடத்திய டிப்ளோமா வகுப்பிற் கேர்ந்து அப் பரீட்சையிற் தேறிய பின் அளவெட்டி அருணோதயாக் கல்லூரியில் ஆசிரியப் பணியைத் தொடர்ந்தார். அங்கு கற்பிக்கும் போது சிரேட்ட தராதரப் பத்திர ஆரம்ப வகுப்பினருக்குப் பாடசாலை நேரத்திற்கு புறம்பான நேரங்களில் ஆரிய திராவிட பாஷாபிவிருத்திச் சங்கப் பிரவேச வகுப்பிற்கான பரீட்சைக்குரிய பாடத்திட்டத்திற்கமைவான நூல்களைக் கற்பித்து அப்பரீட்சைக்குத் தோற்றச் செய்தர். நல்ல பெறுபேறுகளையும் பெறச் செய்தார். ஒரு முறை அகில இலங்கையிலும் முதலிடத்தைப் பெற்றவர் இவர் கற்பித்த அருணோதயாக் கல்லூரி மாணவி என்பது குறிப்பிடத்தக்கது. இவர் கற்பித்த மாணவர்கள் அரசினர் பரீட்சைகளில் பெரும்பாரும் சித்தியடையத் தவறுவதில்லை.

பண்டிதர் நாகலிங்கம் அவர்கள் கூட்டுறவுத்துறையில் ஆற்றிய பணி வியந்து பேச வேண்டியது. 1942 இல் பண்டகசாலைச் சங்கங்களாள இவை ஆரம்பிக்கப்பட்ட வேளை அளவெட்டி மேற்கில் ஆரம்பிக்கப்பட்ட அளவெட்டி மேற்கில் ஐக்கிய பண்டகசாலைச் சங்கச் செயலாளராகத் தெரிவு செய்யப்பட்டவர் பின்னர் நடந்த தேர்தலில் தலைவரானார். அதே வேளை வலிகாமம் வடக்குப் பண்டகசாலைகளுக்குப் பொருள் விநிகோகிக்கும் வலிவடக்குப் பண்டகசாலைகளின் சமாச இயக்குனர் சபை உறுப்பினராக 1963 ஆம் ஆண்டு தெரிவு செய்யப்பட்டார். 1966 இல் அச்சங்கத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் தலைவராக இருந்த காலத்திலேயே சுன்னாகம் பலநோக்கு கூட்டுறவுச் சங்கக் காரயாலயக் கட்டிடம் கட்டப்பட்டது என்பது குறிப்பிடப்பட வேண்டியது. 1971 ஆம் ஆண்டு கூட்டுறவுச் சங்கங்கள் மறுசீரமைக்கப்பட்ட போது அளவெட்டி மல்லாகம் பலநோக்கு கூட்டுறவுச் சங்கம் அமைக்கப்பட்டது. அச்சங்கத்தில் 1978 ஆம் ஆண்டு முதல் 1990 ஆம் ஆண்டு வரை பண்டிதர் நாகலிங்கமே தலைவராகவிருந்து சங்கத்தை வழி நடத்தி வந்துள்ளார்.

அளவெட்டி முதலியவேள் ஆலயத் தர்மகர்த்தா சபைத் தலைவராக நீண்டகாலம் சேவையாற்றியுள்ள பண்டிதர் நாகலிங்கம் 1995 ஆம் ஆண்டு நிகழ்ந்த புலம் பெயர்வு காரணமாக யாழ்ப்பாணத்தை விட்டு வெளியேறி வவுனியாவிலுள்ள கனகராயன் குளத்தில் ஆசிரியராகவிருந்த மகளுடனும் அதிபராகவிருந்த மருமகனுடனும் பாடசாலைக்கான அரச விடுதியில் குடும்பத்தாருடன் தங்கியிருந்தனர். 1996 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் சொந்த ஊருக்கு வந்து சேர்ந்தார். அப்போது அளவெட்டி வடக்கு தாமர் வளவு வைரவர் ஆலயம் எறிகணை வீச்சுக்களாலும் குண்டுத் தாக்குதல்களாலும் சிதைந்து பாரிய அழிவிற்குள்ளாகி இருந்தமை கண்டு கொள்ளப்பட்டது. அதை புனரமைப்புச் செய்யும் பணியை அப்பகுதி மக்கள் மேற்கொண்டனர். அத்தேவைக்காக ஏற்படுத்தப்பட்ட சபையின் தலைவராகவிருந்து உள்ளுரிலும் வெளிநாட்டிலும் நிதி திரட்டி ஆலயம் சிறப்பாகக் கட்டப்பட்டவும் கும்பாபிஷேகம் நடக்கவும் வழிசமைத்தபண்டிதர் நாகலிங்கத்தின் சேவை பலராலும் பாராட்டப்பட்டது.

இந்தக் காலப்பகுதியில் அளவெட்டி கும்பிழாவளைப் பிள்ளையார் கோயிலைப் புனருத்தாரணஞ் செய்ய அவ்வாலயத் தர்மகர்த்தாக்கள் சபை சிந்தித்தது. தர்மகர்த்தக்கள் சபை அதற்கென ஓர் குழுவையும் அமைத்தனர். அந்தக் குழுவின் தலைவராகவும் பண்டிதர் நாகலிங்கம் அவர்களே தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் தலைமையில் கோயில் புனருத்தாபனம் செய்யப்பட்டமையும் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டமையும் யாவரும் அறிவர்.

அளவெட்டி முழுமைக்குமாகச் சேவையாற்றும் அளவெட்டி மஹாஜன சபை,அளவெட்டி கிராம முன்னேற்றச் சங்கம் என்பவற்றின் தலைவராக இவர் மூன்று தசாப்த காலம் சேவையாற்றியுள்ளார். அக்காலப்பகுதியில் அளவெட்டி வடக்கில் ஒன்றும் தெற்கில் ஒன்றுமாக இரு நெசவு நிலையங்களை அரசினர் நிதி உதவியுடன் கட்டிப் பணி தொடர வைத்துள்ளார். அளவெட்டி சலவைத் தொழிலாளர்களுக்காக அளவெட்டி வடக்கில் அழகொல்லை விநாயகர் ஆலயக் குளத்திலும் அளவெட்டி தெற்கில் உத்திரிக்கைக் குளத்திலும் ஒவ்வொரு கிணறும் பதினைந்து பதினைந்து தொட்டிகளும் துணி வெளுப்பதற்குரிய கற்களும் அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளன. மடங்கள் மலசலகூடங்கள் என்பனவும் அமைக்கப்பட்டுள்ளன. அளவெட்டியிலுள்ள வீதிகள் நல்ல முறையில் செப்பனிடப்பட்டுள்ளன. நடைபெறவுள்ள கிராம அபிவிருத்தி வேலைகள் மிகப் பல. எந்தவொரு பகுதியினரும் குறை கூற முடியாத வகையில் இந்த வேலைகள் நடைபெற்றுள்ளன.

பண்டிதர் அரசியலிலும் நல்ல ஈடுபாடுடையவர். தந்தை செல்வநாயகம் அவர்கள் தலைமையில் அமைக்கப்பட்ட தமிழரசுக் கட்சியில் தம்மையும் ஒரு உறுப்பினராக இணைத்துக் கொண்டு அக்கட்சி சார்பில் நடத்தப்பட்ட சிங்களச்சிறீ அழிப்பு, சத்தியாக்கிரகப் போராட்டம் முதலிய பல நிகழ்ச்சிகளிலும் பங்கு பற்றியவர். கட்சியின் மாநாடுகளில் எல்லாம் கலந்து கொண்டவர். அக்கட்சியின் சார்பில் போட்டியிட்டோர் பலரின் தொகுதிகளுக்குச் சென்று அவர்களின் வெற்றிக்காகப் பாடுபட்டவர். அண்மையில் கட்சி வழங்கிய விருது வழங்கல் நிகழ்ச்சியில் இவருக்கும் விருது வழங்கப்பட்டது. மத்திய நிர்வாக உறுப்பினராக இவர் இரண்டு ஆண்டுகள் சேவையாற்றியும் உள்ளார். வலிகாமம் வடக்கு கட்சிக் கிளையின் தலைவராக இவர் பல்லாண்டுகள் சேவையாற்றியுள்ளார். தற்போதைய சூழ்நிலையில் கட்சியின் செயற்பாடு முடங்கிக் கிடப்பது பற்றி இவர் கவலைப்படுவதுண்டு.

இவர் தமது குருநாதராகக் கொண்டு வழிபடுபவர் புலவர் க.சு.நவநீதகிருஷ்ணபாரதியாரே எனல் தகும். பாரதியாரிடம் பரமேஸ்வரா பயிற்சிக் கலாசாலையில் மூன்றாண்டுகள் இலக்கண,இலக்கியம், செய்யுளியந்தல் என்பவற்றைக் கற்றவர். பயிற்சிக் கல்லூரியை விட்டு வெளியேறிய பின் குருகுலக் கல்வியை மேற்கொண்டு இரண்டாண்டுகளுக்கு மேல் தொல்காப்பியத்தை உரையாசிரியர் பலரின் உரையோடு ஊன்றிக் கற்றவர். பாரதியாரின் திருவாசக ஆராய்ச்சிப் பேருரையை எழுதி முடிப்பதில் இவரின் பங்கு பற்றிப் பாரதியார் தமமு நூலின் முகவுரையிற் குறிப்பிட்டுள்ளார். பாரதியார் இயற்றிய உலகியல் விளக்கம் என்னும் நூலிலுள்ள எழுபது அகவற் பாக்களும் பாவொன்றுக்கு ஒரு தங்கப்பவுண் என்ற கோட்பாட்டுடன் நிதி சேகரித்து அக்காலத்தில் அத்தொகைக்கு மேற்பட்ட பொற்கிழி நிதி வழங்கப்பட்டது. நிதி சேகரிப்புச் சபையின் தலைவராக ஏழதலை ஞானப்பிரகாசமும் செயலாளராக இவரும் தெரிவு செய்யப் பெற்றிருந்தனர். யாழ்ப்பாணம் மாநகர சபை மண்டபத்தில் பல்கலைக்கழகப் பேராசிரியர் கணபதிப்பிள்ளை தலைமையில் பொற்கிழி வழங்கும் வைபவம் 1952 ஆம் ஆண்டு ஆவணி மாதம் நடைபெற்றது.

பண்டிதர் நாகலிங்கம் கல்வி சம்பந்தமான பல சங்கங்களிலும் தொடர்புடையவராய் இருந்திருக்கிறார். அகில இலங்கைப் பண்டித ஆசிரியர் சங்கத் தலைவராய் இருந்து அச்சங்கத்தின் சார்பில் பண்டித ஆசிரியர்களுக்குப் பட்டாதரிச் சம்பளம் வழங்க வேண்டுமெனக் கிறிஸ்தோபர் ஆணைக்குழுவிலும் அதற்குப் பிந்திய சம்பள விசாரணைச் சபைகள் முன்னும் வற்புறுத்தியதன் பேரால் பண்டித பட்டதாரிகளுக்கு ஒரு சம்பளத்திட்டம் வழங்கப்பட்டது. பரமேஸ்வராப் பண்டிதப் பட்டதாரிகள் சங்கத் தலைவராக இருந்து தமிழரசுக் கட்சித் தலைவர் செல்வநாயகம், அ.அமிர்தலிங்கம் என்போருடன் கல்வி மந்திரி இரியகொல என்பவரைச் சந்தித்து தங்கள் நிலைப்பாட்டை விளக்கிய போது புதிய சம்பள சபை வரும் போது தாமே சிபார்சு செய்வதாக அமைச்சர் கூறினாரேனும் அது நிறைவேறாதது துரதிஷ்ரமே;

யாழ்ப்பாணம் ஆரிய திராவிட பாஷாபிவிருத்திச் சங்க நிர்வாக சபையில் 1948 ஆண்டு முதல் இவர் உறுப்பினராக இருந்து 1952 ஆம் ஆண்டு முதல் அச்சங்கத்தின் தனாதிகாரியாக தாம் 1992 இல் விலகும் வரை கடமையாற்றியுள்ளார். அச்சங்கப் பரீட்சகராகவும் பாடவிதான அமைப்புச் சபை உறுப்பினராகவும் இவர் செயற்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

பண்டிதர் தமிழ்மொழி வளர்ச்சிக்குச் செய்த தொண்டுகளை முன்னரே கண்டுள்ளோம். தொல்காப்பியம் என்னும் இலக்கணக் கடலைப் பல முசை நீந்தி இவர் பெற்ற நான்கு முத்துக்கள் செந்தமிழிலக்கண விளக்கம் என்னும் பெயர் தாங்கி எம்முன் நிற்கின்றன. பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவர்களுக்கு இந்த நூல்கள் பேருபகாரமானவை. நன்நூல் இலக்கண விளக்கம் என்பவற்றுடன் இலக்கணச் செய்திகளை அறிவதற்குச் செந்தமிழிலக்கண விளக்கம் நல்ல வகையில் அமைந்தது என்பதில் சந்தேகமில்லை. பல ஆண்டுகளாகப் பண்டித வகுப்பு மாணவர்களுக்குக் கற்பித்த போது கிடைத்த முத்துக்களைக் குறித்து வைத்திருந்த பண்டிதர் ஐயா அவர்கள் இப்போது நூல் எனும் வடிவில் பயன் கண்டுள்ளார்கள். படிப்பவர்களாய நாம் பெரும் பயன் பெற்றுள்ளோம். அவர் தந்த நூல்கள் பற்றிய விபரம்

1. செந்தமிழ் இலக்கண விளக்கம் – முதலாம் பாகம்

முதற்பதிப்பு : விக்கிரம சித்திரை ஏப்பிரல் 2000.

இந்நூலில் எழுத்திலக்கணம் சொல்லிலக்கணம் என்னும் இரு பகுதிகள்

சித்தரிக்கப்பட்டுள்ளன.

2. செந்தமிழ் இலக்கண விளக்கம் – இரண்டாம் பாகம்.

முதற்பதிப்பு : சுபானு சித்தரை ஏப்பிரல் 2003

இந்த இரண்டாம்; பகுதியில் செய்யுளியல் அணியியல் பற்றிய

செய்திகளை சிந்தனைக்கு உள்ளாக்கியுள்ளது.

3. செந்தமிழ் இலக்கண விளக்கம் – மூன்றாம் பாகம்

முதற்பதிப்பு : தாரண வருஷம் மார்ச் 2005

அகத்திணையியலும் புறத்திணையியலும்

4. செந்தமிழ் இலக்கண விளக்கம் – நான்காம் பாகம்

முதற்பதிப்பு : தாரண வருஷம் மார்ச் 2005

மெய்ப்பாட்டியலும் மரபியலும்

இந்நூல்கள் பலரின் பாராட்டைப் பெற்றுள்ளன. பழந்தமிழ் உரையாசிரியர்களின் குறை நிறைகள் இவருடைய நூல்களில் சுட்டப்பட்டுள்ளன. தொல்காப்பியம் கற்போர்க்கு இந்நூல்கள் பெரிதும் பயன்படுமெனப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேராசிரியர்கள் பாராட்டிப் பேசியுள்ளனர். பல்கலைக்கழகத் தமிழ்த்துறை மாணவர்களால் இவை பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

இவருக்கு இரு ஆண் பிள்ளைகளும் ஆறு பெண்பிள்ளைகளும் உள்ளனர். இவரது மூத்த மகன் கிளிநொச்சி அரசாங்க அதிபராகப் பணி புரிகின்றார். இவரது இராண்டாவது மகன் அளவெட்டி அருணோதயாக் கல்லூரி அதிபராகி நல்ல பணி புரிகின்றார். மூன்று பெண் பிள்ளைகளும் பட்டதாரிகளாகி ஆசிரியப் பணி புரிகின்றனர். வைத்திய கலாநிதியாகிய ஒரு மகள் யாழ் பல்கலைக்கழக மருத்துவபீட விரிவுரையாளராக உள்ளார். அவரது கணவரும் யாழ் பல்கலைக்கழக மருத்துவபீட விரிவுரையாளராக உள்ளார்.

பாடசாலை மாணவர்களுக்குப் பேச்சுப் போட்டி கட்டுரைப் போட்டிக்கான விடயங்களை எழுதிக் இவர் திறமை நாடறிந்தது. இவர் எழுதிய பேச்சுக்களை ஆயத்தம் செய்து பேசிக் கட்டுரைகளை மனதுக்குள் வாங்கி போட்எயின் போது எழுதிப் பலர் பரிசில் பெற்றுள்ளனர். இவற்றை எல்லாம் தொகுத்து ஒரு நூலாக்கி வெளியிட்டால் பின்னே வருபவர்களுக்குப் பயன்பாடுடையவை ஆகலாம்.

அளவெட்டிக் கிராமத்தில் ஒரு சமாதான சபை அமைக்கப்பட்டது. அச்சபையின் முதல் தலைவர் பெரியார் செ.மயில்வாகனம் அவர்கள். இரண்டாவதாக அதாவது பெரியார் மயில்வாகனத்தின் பின் திரு.அ.தனபாலாசிங்கம் அவர்கள். அவரின் பின் எங்கள் நூலாசிரியர் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவர்கள் காலத்திலே உண்டாகும் எந்தப் பிரச்சினையையும் நீதியாக எல்லோரும் ஏற்றுக்கொள்ளக் கூடிய முடிபை எட்ட வைத்துத் தீர்த்து விடுவார்கள். பின்னர் இடம் பெற்ற புலம் பெயர்வின் பின் இச்சமாதான சபையின் இயக்கம் நின்று விட்டது.

1986 ஆம் ஆண்டில் நாகவரத நாராயணர் தேவஸ்தானம் இந்நூலாசிரியருக்குப் பண்டிதமணி என்ற பட்டத்தை வழங்கியது. அதே தேவஸ்தானம் 2002 இல் இலக்கண வித்தகர் என்ற பட்டம் சூட்டிக் கௌரவித்தது. இந்நூலாசிரியர் ஆசிரியர் பயிற்சிக் காலத்தில் மதுரைத்தமிழ்ச் சங்கம் வழங்கிய பண்டிதர் எனும் பட்டம் ஒன்றையே பயன்படுத்தி வருகிறார். ஏனைய எந்தப் பட்டத்தையும் அவர் பயன்படுத்தியதில்லை. பராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் சமாதான நீதிபதி என்னும் ஜே.பி. பட்டத்தைப் பெற்றுக் கொடுக்கவிழைந்தனர். எங்கள் பண்டிதர் அதனையும் ஏற்க மறுத்து விட்டார்.

அதே போன்று எங்கள் ஆசிரியர் தாம் எழுதிய நூல்களுக்குச் சாஹித்திய மண்டலம் பரிசில் தர வேண்டுமென்று விரும்பியதில்லை. பரிசில் பெறும் நோக்குடன் புத்தகங்களை அனுப்பியதுங் கிடையாது.

தனக்கென வாழாப் பிறருக்குரியவராக வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த நூலாசிரியர் பண்டிதர் சாகலிங்கம் அளவெட்டிக் கிராம மக்களிலே நிறைவான கவனம் செலுத்தியவர். எந்த வகையிலும் அவர்கள் குறைபாடடையக் கூடாது என்பது அவர் கருத்து.

எந்த வேளையும் சிரித்த முகத்துடனே உரையாடுவார். மாணவர்களிடம் மிகுந்த அன்பு செலுத்துபவர் தோட்டத்திலே நின்று தொழில் புரியும் நேரத்தில் கூட மாணவர்களுக்கு உண்டான ஐயத்தைத் தீர்த்து வைக்க அவர் பின் நின்றதில்லை.

“வித்துமிடல் வேண்டுங் கொல்லோ” என்ற வள்ளுவன் காண வைத்த உண்மையை பண்டிதர் குடும்பத்தினுடாக கண்டு மகிழ்வடைவோம்.

திரு.வை.சுப்பிரமணியம்.

தலைவர்

அளவெட்டி மகாஐன சபை

Bookmark the permalink.

Leave a Reply