சிறப்புற்ற கவிதைப் பட்டறை…

யாழ். பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற கவிதைப் பட்டறை

யாழ்ப்பாணத் தமிழ்ச் சங்கமும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறையும் இணைந்து நடத்திய ‘தமிழ்க் கவிதை மரபும் மாற்றமும்’ என்ற தொனிப்பொருளில் அமைந்த கவிதைப் பட்டறை 25.05.2014 ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணி தொடக்கம் பிற்பகல் 4 மணி வரை யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முகாமைத்துவ மண்டபத்தில் இடம்பெற்றது.

யாழ்ப்பாணத் தமிழ்ச் சங்கத்தலைவரும் யாழ். பல்கலைக்கழக முகாமைத்துவக் கற்கைகள் வணிகபீடப் பீடாதிபதியுமாகிய பேராசிரியர் தி.வேல்நம்பியின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் வரவேற்புரையை யாழ்ப்பாணத் தமிழ்ச் சங்கப் பொருளாளர் விரிவுரையாளர் ச.லலீசனும் வாழ்த்துரையை யாழ். பல்கலைக்கழக கலைப்பீடாதிபதி பேராசிரியர் வி.பி. சிவநாதனும் கவிதைப் பட்டறைக்கான திறப்புரையை நிகழ்வின் பிரதம ஏற்பாட்டாளரும் யாழ்ப்பாணத் தமிழ்ச் சங்க உப தலைவரும் யாழ். பல்கலைக்கழக தமிழ்த்துறைத் தலைவருமாகிய பேராசிரியர் கி.விசாகரூபனும் நிகழ்த்தினர்.

‘தமிழ்க் கவிதை அன்றும் இன்றும்’ என்ற பொருளில் தமிழ்த்துறை சிரேஷ்ட விரிவுரையாளர் ஈ.குமரனும் ‘படைப்பாளி நோக்கில் தமிழ்க் கவிதை’ என்ற பொருளில் கவிஞர் த.ஜெயசீலனும், ‘மரபும் கவிதையும்’ என்ற பொருளில் பலாலி ஆசிரிய கலாசாலையின் முன்னாள் அதிபர் கவிஞர் சோ.பத்மநாதனும் ‘கவிதை இரசனையும் திறனாய்வும்’ என்ற பொருளில் முன்னாள் தமிழ்த்துறைத் தலைவர் பேராசிரியர் எஸ்.சிவலிங்கராஜாவும், ‘நவீன தமிழ்க் கவிதை – உருவமும் உணர்த்துமுறையும்’ என்ற பொருளில் தமிழ்த்துறை சிரேஷ்ட விரிவுரையாளர் க.அருந்தாகரனும் கருத்துரைகளை வழங்கினர். முதுதத்துவமாணி மாணவன் த.அஜந்தகுமார் தொகுப்புரையையும் மருத்துவபீட உதவிப் பதிவாளரும் தமிழ்ச்சங்கப் பத்திராதிபருமாகிய இ.சர்வேஸ்வரா நன்றியுரையையும் நல்கினர்.

நிகழ்வின் நிறைவில் கவிதைப் பட்டறையில் கலந்து கொண்டவர்களிடையே கவிதைப் போட்டி ஒன்றும் நடத்தப்பட்டது. இதற்கான பரிசில்கள் அளவெட்டியில் தமிழ்ச்சங்கத்தால் விரைவில் நடத்தப்படவுள்ள மகாகவி உருத்திரமூர்த்தி நினைவுப்; பெருவிழாவில் வைத்து வழங்கப்படுமெனத் தெரிவிக்கப்பட்டது.

கவிதைப் பட்டறையில் கலந்து கொண்டோருக்கான காகிதாகி அனுசரணையை யாழ். அன்னை புத்தகசாலையினரும் மதியபோசன அனுசரணையை காரைநகர் வியாவில் ஐயனார் தேவஸ்தானத்தினரும் வழங்கியிருந்தனர். நிகழ்வில் 250 இற்கும் மேற்பட்ட ஆசிரியர்களும் மாணவர்களும் கவிதை ஆர்வலர்களும் கலந்து பயன்பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Bookmark the permalink.

Leave a Reply