சிலப்பதிகாரத்தின் பதினொரு வகை ஆடல்களையும் காட்சிப் படுத்திய சிலப்பதிகார விழா

யாழ். நல்லூரில் நடைபெற்ற சிலப்பதிகார விழாவின் நிறைவு நாள் நிறைவு நிகழ்வாக சிலம்பு கூறும் பதினோர் ஆடல்கள் என்ற தலைப்பில் அமைந்த நாட்டிய நிகழ்வு இடம்பெற்றது. அனைவரும் வியக்கும் வகையில் ஏறத்தாழ ஒரு மணி நேர ஆற்றுகை நிகழ்வாக இது அமைந்திருந்தது. .
கிழக்குப் பல்கலைக்கழகத்தின் சுவாமி விபுலாநந்தர் அழகியற் கற்கைகள் நிறுவக நடனத்துறையினர் இந்த அழகிய ஆற்றுகையை வழங்கியிருந்தனர்.

பதினொரு விரிவுரையாளர்களும் 22 நடனத்துறை மாணவர்களும் இணைந்து இந்த நிகழ்வைப் படைத்திருந்தனர்.

விரிவுரையாளர் கலாநிதி ஷார்மிளா ரஞ்சித்குமாரின் நெறியாள்கையில் நிகழ்வு இடம்பெற்றது. ஆற்றுகை முகாமைத்துவத்தை கரன் கணேசமூர்த்தி மேற்கொண்டார். ஆற்றுகையின் எழுத்துரு – பிரமின் விக்னேஸ்வரன்.

சிலம்பு கூறும் பதினோர் ஆடல்கள் குறித்த குறிப்பேடு ஒன்றையும் சபையோருக்கு வழங்கி நிகழ்வை ஆரம்பித்தனர்.
கொடுகொட்டி (திரிபுரம் எரியச் சிவன் கைகொட்டி ஆடியது), பாண்டரங்கம் (ஆணுருக்கொண்டு சிவன் நீறு பூசி ஆடியது), அல்லியம் (யானை உருவெடுத்த கம்சனின் கொம்பைக் கண்ணன் உடைத்து ஆடியது), மல்லாடல் (கம்சனால் ஏவப்பட்ட மல்லர்களோடு கண்ணன் யுத்தம் புரிந்து ஆடியது) துடிக்கூத்து (கடல் மீது போர் தொடுத்த அசுரரை எதிர்த்து முருகன் துடியேந்தி ஆடியது), குடைக்கூத்து (அவுணர்கள் முன் முருகன் தன் குடையைத் திரையாகக் கொண்டு ஆடியது) குடக்கூத்து (அனிருத்தனைச் சிறை மீட்க கிருஷ்ணன் குடம் கொண்டு ஆடியது), பேடிக் கூத்து (காமன் தன் மகனை மீட்பதற்காக ஆண்மைத் தன்மை நீங்கிப் பெண்மைத் தன்மை கொண்டு ஆடியது), மரக்காற்கூத்து (அவுணர்கள், பாம்பு, தேள் உருக்கொண்ட போது துர்க்கை கால்களில் மரக்காலைக் கட்டி ஆடியது) பாவைக் கூத்து (திருமகள் கொல்லிப்பாவை வடிவம் கொண்டு தீயோரை மயக்கி அழித்து ஆடியது) கடையக் கூத்து (இந்திரனின் மனைவியான இந்திராணி உளத்திய வடிவம் கொண்டு ஆடியது) எனத் தத்ரூபமாகத் தமது ஆற்றுகையை அமைத்து மண்டபம் நிறைந்திருந்த சபையோரின் பாராட்டைப் பெற்றுக்கொண்டனர். 

சிறப்பு மிக்க இந்த நிகழ்வைச் சிலப்பதிகார விழாவில் இணைத்த பெருமை யாழ். தமிழ் ஆடற்கலை மன்ற அமைப்பாளரும் யாழ் பல்கலைக்கழக நடனத்துறை முதுநிலை விரிவுரையாளருமாகிய அருட்செல்வி கிருபைராஜாவையே சாரும்.

இந்த நிகழ்வுகளைச் சென்று பார்த்துவிடாதீர்கள் என்று யாழ்ப்பாண உயர் கல்வி நிறுவன நடன மற்றும் இசைத்துறை மாணவர்கள் – சில பொறுப்பு மிக்க விரிவுரையாளர்களால் அறிவுறுத்தப்பட்டிருந்தனர். 

கம்பவாரிதி முன்னர் ஒரு தடவை – இத்தகைய யாழ்ப்பாண மனோநிலை குறித்து வேதனைப் பட்டமையை நானும் – சிலப்பதிகார விழாவில் கலந்து கொண்டிருந்த சமூக ஆளுமைகள் சிலரும் வழிமொழிந்து கவலை கொண்டோம். எங்களால் வேறு என்னதான் செய்து விட முடியும்?

Bookmark the permalink.

Leave a Reply