எம்மைப்பற்றி

tamilஆண்டுகள் ஆயிரம் கடந்தும் மாண்டு போகாது வாழும் எங்கள் தாய்மொழிக்கு வணக்கம். எல்லைகள் கடந்தும் எங்கள் மொழி வாழ தங்கள் வல்லமை கொண்டு உழைத்த தமிழ்த்தாயின் மகவுகளுக்கு சிரம் தாழ்த்தினோம். காலமாற்றம் பல ஆதி மொழிகளை காவு கொள்ள காலத்துக்கு ஏற்ப தன்னை வளமாக்கி இன்று எம் தாய் மொழியாம் தமிழ்மொழி செம் மொழியாய் சிறப்புற்று நிற்கின்றது. இயல் இசை நாடகம் என பரவிய முத்தமிழ் இன்று அறிவியற் தமிழையும் தன்னோடு அகமிணைத்து அரசாள்கின்றது.

தமிழ் பிறந்து செழித்து வளர்ந்த தேசங்களுள் முதன்மையானது எம் தாய்த்தேசம் ஈழ மண். அதிலும் யாழ்ப்பாணத் தமிழ் என்பது தலமைத் தமிழாய் வழிநடத்தும் வல்லமையை  பல வழிகளிலும் தனக்காக்கிய பெருமையுடைத்தது.

எத்தனை தமிழ்ச் சங்கங்கள் உலகத் திசையாவும் பரவித் தமிழ் வளர்த்த போதும் யாழ்ப்பாணத்தில் ஓர் சங்கம் இல்லை எனும் குறை பெருங்குறையாய் கறையாய் தொடர்ந்த நிலையில் மீளவும் தன்னை புத்துயிர்த்துக்கொண்டது யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கம்.

எங்கள் சங்கத்தின் தமிழ்ப் பணிகள் பல தளங்களில் விரியும் வேளையில் இன்று உலகப் பந்தின் பல பாகங்களிலும் பரவி வாழும் தமிழ் உறவுகளோடு எம்மை இணைக்கும் பாலமாக வலுப்பெறுகின்றது யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கத்தின் இவ் உத்தியோகபூர்வ இணையத்தளம்.

எங்கள் தளத்தின் பணிகளை பல தளத்தில் விரித்து தமிழ் வளர்க்க விருப்பு கொண்டோம். இருந்தும் வளப்பற்றாக்குறையும் நிதிப் பற்றாக்குறையும் எமக்கும் உள்ள இடராகத் தொடர்கின்றது.தமிழ்த்தாயின் வனப்புக்காய் தமிழ்ச் சங்கத்தின் வளர்ச்சிக்காய் தொடரும் இடர்களைய பல கரங்கள் எம்மோடு இணையும் எனும் நம்பிக்கை எமக்குண்டு.

தூயவை துணிந்து விட்டால் பழி வந்து சேர்வதில்லை எனும் நிலையோடு தமிழ் வளர்க்கும் எங்கள் பணி தொடரும்.உங்களையும் பங்கெடு்க்க அழைக்கின்றோம்.

தமிழாய் வாழ்வோம்…தமிழுக்காய் வாழ்வோம்…..

 

Comments are closed.