ஞானம் சஞ்சிகை ஆசிரியர் சாகித்தியரத்னா மருத்துவர் தி. ஞானசேகரன் மறைவுக்கு யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கத்தின் இரங்கல்

சாகித்தியரத்னா மருத்துவர் தி. ஞானசேகரன் அவர்களின் மறைவுக்கு யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

யாழ்ப்பாணம் புன்னாலைக்கட்டுவன் – ஈவினையைப் பூர்வீகமாகக் கொண்ட இவர் 2000 யூன் 06 ஆம் திகதி தொடக்கம் ஞானம் என்ற இலக்கிய சஞ்சிகையை வெளியிடத் தொடங்கி இளையோரை எழுத்துத் துறையில் ஊக்குவித்து வந்தார். இச்சஞ்சிகை அச்சு வடிவிலும் இணையவழியிலும் வெளிவருகின்றது. ஞானம் 150 ஆவது இதழ் போரிலக்கியச் சிறப்பிதழாக வெளிவந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

மரபுவழிக் கல்வியை வீட்டுச் சூழலினால் பெற்றுக்கொண்ட இவர் நவீன இலக்கியப் பயிற்சியை வாசிப்பின் மூலம் தமதாக்கிக்கொண்டார். சிறுகதை நாவல் என நவீன இலக்கியத் தளங்களில் தடம் பதித்தார்.

1972 இல் காலதரிசனம் என்ற சிறுகதைத் தொகுதி மூலம் சிறுகதை உலகிற்குள் கால்பதித்தார். இவரது சிறுகதைகள் மாணவர்களுக்குப் பாடநூலாக உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

சாதியத்திற்கு எதிராக புதிய சுவடுகள் என்ற நாவலை வெளியிட்டார். மலையக மக்களை மையப்படுத்தி குருதிமலை என்ற நாவலை வெளியிட்டார். இந்த நூல் மதுரை அமெரிக்கன் பல்கலைக்கழகத்தில் பாடநூலாக உள்ளது. கவ்வாத்து என்ற நாவலையும் இவர் வெளியிட்டுள்ளார்.

இவரது புதல்வர் ஞானம் பாலச்சந்திரன் யாழ்ப்பாண மன்னர் நிறுவிய தமிழ்ச்சங்கம் என யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கத்தின் தொன்மை குறித்த நூல் ஒன்றை எழுதியுள்ளார் இதில் யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கம் நான்காம் தமிழ்ச்சங்கம் என்று சான்றுப்படுத்திப் பதிவு செய்துள்ளார்.

எழுத்துலகில் சாதனை மனிதராக வாழ்ந்த சாகித்தியரத்னா மருத்துவர் தி. ஞானசேகரனின் இழப்பினால் துயருறும் அனைவருக்கும் எமது ஆறுதலைத் தெரிவிப்பதுடன் அன்னாரின் ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.

– யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கம்

யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கத் தலைவர் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் ஆனமையைக் கௌரவித்து தமிழ்ச்சங்க ஆட்சிக் குழுக் கூட்டத்தில் கௌரவம்

யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கத்தின் ஆட்சிக்குழுக் கூட்டம் 12.04.2026 அன்று நடைபெற்ற போது வருகை தந்த தமிழ்ச்சங்கத் தலைவர் பேராசிரியர் தி. வேல்நம்பி அவர்கள் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தராக நியமனம் பெற்றமையை இட்டு ஆட்சிக் குழுவினரால் பாராட்டிக் கௌரவிக்கப்பட்டார். இவருக்கான பொன்னாடையை சங்கத்தின் பெருந்தலைவர் பேராசிரியர் அ. சண்முகதாஸ்; போர்த்தினார். செயலாளர் ச.லலீசன் மாலை அணிவித்துக் கௌரவித்தார். ஆட்சிக் குழுவின் சார்பில் இ.சர்வேஸ்வரா பாராட்டுரை வழங்கினார்.

இதேவேளை துணைவேந்தர் பேராசிரியர் தி. வேல்நம்பி அவர்களுக்கு கடந்த 05.04.2026 ஞாயிற்றுக்கிழமை புத்தூர் ஸ்ரீ சோமாஸ்கந்த கல்லூரியில் நடைபெற்ற பாராட்டு விழாவின் போது தமிழ்ச்சங்கத்தின் சார்பில் பெருந்தலைவர் பேராசிரியர் அ. சண்முகதாஸ் வாழ்த்துரை வழங்கினார். தமிழ்ச்சங்கத்தின் சார்பில் நினைவுப் பரிசில் வழங்கி வைக்கப்பட்டது. இதன்போது சங்க உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டு சிறப்பித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சிறப்புற இடம் பெற்ற சுவாமி ஞானப்பிரகாசரின் பிறப்பின் 150 ஆவது ஆண்டு நிறைவு விழா

நல்லூர் சுவாமி ஞானப்பிரகாசரின் முப்பொன்விழா யாழ்ப்பாண தமிழ்ச் சங்கம் , யாழ்ப்பாண மறைமாவட்டம், யாழ் அமலமரித் தியாகிகள் சபை என்பவற்றின் ஏற்பாட்டில் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் ஆய்வரங்கம் – திருமறை கலாமன்றத்தில் கலையரங்கம் என கடந்த 26.10.2025 ஞாயிறு காலை மாலை நிகழ்வுகளாகச் சிறப்புற இடம்பெற்றது

காலை அமர்வு யாழ்ப்பாண தமிழ்ச் சங்கத் தலைவர் பேராசிரியர் தி.வேல் நம்பி தலைமையில் ஆய்வரங்காக இடம்பெற்றது

இதில் யாழ்ப்பல்கலைக் கழக விரிவுரையாளர் கலாநிதி சுகன்யா அரவிந்தன் தமிழ்த்தாய் வாழ்த்து இசைத்தார். தமிழ்ச் சங்கச் செயலாளர் சந்திரமௌலீசன் லலீசன் வரவேற்புரை ஆற்றினார்.

யாழ் மறை மாவட்ட குரு முதல்வர் அருட் தந்தை பி. ஜெ. ஜெபரட்ணம் மன்னார் மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை தமிழ்நேசன் ஆகியோர் ஆசிரியரை வழங்கினர்

13 ஆய்வாளர்களின் ஆய்வுக் கட்டுரைகளை உள்ளடக்கிய முப்பொன்விழா ஆய்வரங்க மலர் வெளியீடு செய்யப்பட்டது. இதனை யாழ் பல்கலைக்கழக மொழியியல் துறை ஓய்வு நிலை பேராசிரியர் கலாநிதி சுபதினி ரமேஷ் வெளியிட்டு வைத்தார்

தொடர்ந்து ஆய்வாளர்களின் ஆய்வுரைகள் இடம் பெற்றன

காலை அமர்வை தமிழ் சங்க ஆட்சிக் குழு உறுப்பினர் யோ. நிவேதன் முன்னிலைப்படுத்தினார்

மாலை அமர்வு திருமறைக்கலாமன்ற கலைத்தூது கலையகத்தில் முப்பொன் விழாக்குழு இணைத்தலைவர் அருட் தந்தை ஜெரோ செல்வநாயகம் தலைமையில் இடம்பெற்றது

இந்நிகழ்வில் ஆசிரியர் இ. ஜெயக்காந்தன் இறை வணக்கம் இசைத்தார் புனித பத்திரிசியார் கல்லூரி மாணவர்கள் தமிழ் தாய் வாழ்த்து இசைத்தனர்

யாழ் இந்து மகளிர் கல்லூரி மாணவிகள் வரவேற்பு நடனம் வழங்கினர்

நிகழ்வில் ஆசிரியரையை யாழ் ஆயர் பேரருட் தந்தை ஜஸ்டின் ஞானப்பிரகாசம் ஆற்றினார்

தமிழ் சங்கத் தலைவர் பேராசிரியர் தி. வேல் நம்பி, அமல மரித் தியாகிகளின் யாழ் மாகாண தலைவர் அருட்தந்தை போல் ஜெயந்தன் பச்சேக் ஆகியோர் வாழ்த்துரைகளை வழங்கினர்

உரும்பிராய் பங்கு மக்களின் அபிநய பாடல் மானிப்பாய் பங்கு மக்களின் நடனம் யாழ் வேம்படி மகளிர் கல்லூரி மாணவி சபேசன் நம்சியாவின் உரை திருமறைக் கலாம் என்ற மாணவிகள் சுதர்சினி கரன்சனின் நெறியாள்கையில் வழங்கிய சுவாமி ஞானப்பிரகாசரின் வாழ்க்கை வரலாற்றை சித்திரிக்கும் நாட்டிய நாடகம் என்பன இடம் பெற்றன

முப்பொன் விழாவை ஒட்டி யாழ் கிளிநொச்சி மன்னார் முல்லைத்தீவு வவுனியா மாவட்டங்களில் நடத்தப்பட்ட பேச்சு மற்றும் கட்டுரை போட்டிகளுக்கான பரிசளிப்பு வைபவமும் இடம்பெற்றது. இதனை அருட்தந்தை எஸ் ஜே ஜீவரட்ணம் முன்னிலைப்படுத்தினார்

நல்லை ஆதீனத்தில்  யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கம் நடத்திய  திருவள்ளுவர் விழா

யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கம் முன்னெடுத்த திருவள்ளுவர் விழா கடந்த வியாழக்கிழமை  13.03.2024 பிற்பகல் 4.30 மணிக்கு நல்லை ஆதீன கலாமண்டபத்தில் தமிழ்ச்சங்கத் தலைவர் பேராசிரியர் தி. வேல்நம்பி தலைமையில் நடைபெற்றது.

நிகழ்வில் யாழ். பல்கலைக்கழக தமிழ் சிறப்புக்கலை மாணவன் யோ. நிவேதன் வரவேற்புரை ஆற்றினார். யாழ். பல்கலைக்கழக நடனத்துறை விரிவுரையாளர் இராசையா தனராஜின்  திருக்குறள் நடனம் , பண்டத்தரிப்பு பெண்கள் உயர் கல்லூரித் தமிழாசிரியர் ந. குகபரனின் திருக்குறளில் பண்புற மொழிதல் என்ற தலைப்பில் அமைந்த சிறப்புரை,   வலம்புரி பத்திரிகையின் பிரதம ஆசிரியர் ந. விஜயசுந்தரம் தலைமையில் தெ.ஹர்சன், ர.தர்மினி, ஜீவா சஜீவன், இ.கார்த்தியாயினி, த. கருணாகரன், செல்வதிஅம்மா ஆகியோர் பங்குபற்றிய இன்றைய தமிழர் செல்நெறி வள்ளுவர் வகுத்த பாதையில் பயணிக்கின்றதா என்ற பொருளில் அமைந்த பட்டிமண்டபம் என்பன இடம்பெற்றன.

முன்னதாக யாழ் முன்னணிப் பாடசாலைகளில் உயர்தரத்தில் தமிழை ஒரு பாடமாகக் கற்கும் மாணவர்களிடையே அவர்களது பாடத்திட்டத்திற்கு உட்பட்ட வகையில் திருக்குறள் தேர்வு நடத்தப்பட்டது. இதில் அணிக்கு ஐவர் பங்கேற்றனர். யாழ். இந்து மகளிர் கல்லூரி அணி  முதலிடத்தையும் பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரி அணி இரண்டாம் இடத்தையும் பெற்றுக் கொண்டன. போட்டியை சங்கச் செயலாளர் செந்தமிழ்ச்சொல்லருவி ச. லலீசன், ஆட்சிக் குழு உறுப்பினர் யோ. நிவேதன் ஆகியோர் நெறிப்படுத்தினர்.  தமிழ்ச்சங்சப் பொருளாளர் மருத்துவ சேவை உத்தியோகத்தர் லோ. துஷிகரன் நன்றியுரை ஆற்றினார். கோப்பாய் ஆசிரியர் கலாசாலை முதுநிலை விரிவுரையாளர் கு. பாலசண்முகன் நிகழ்வுகளை முன்னிலைப்படுத்தினார்.

நிகழ்வில் தேர்ந்தெடுக்கப்பட்ட பாடசாலைகளுக்கு முனைவர் மனோன்மணி சண்முகதாஸ் உரைவகுத்த திருக்குறன் உரை நூல் இலவசமாக வழங்கப்பட்டது. இதே வேளை திருக்குறளுக்கு உரை வகுத்த முதல் தமிழ் பெண் உரையாசிரியர் என்ற பெருமையைப் பெற்ற முனைவர் மனோன்மணி சண்முகதாஸ் தமிழ்ச்சங்கத்தின் சார்பில் திருமதி சஜிதா வேல்நம்பியால் பொன்னாடை போர்த்திக் கௌரவிக்கப்பட்டார்.

தமிழ்ச்சங்கப் பணிகளுக்கு உறுதுணை செய்த பிரபா ஐயா- தமிழ்ச் சங்கம் இரங்கல்

May be an image of 1 person and smilingயாழ்ப்பாணம் இந்தியத் துணைத்தூதரக அலுவலர்
பிரம்மஸ்ரீ சச்சிதானந்தக்குருக்கள் பிரபாகரன் அவர்களின்
திடீர்மறைவையொட்டி யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கம் வெளியிட்ட அஞ்சலிக் குறிப்பு
………………………………………………………………..
யாழ் மண்ணில் இந்தியத் துணைத்தூதரகச் செயற்பாடுகளை மக்கள் மயப்படுத்துவதில் முன்னின்று உழைத்த பிரம்மஸ்ரீ ச. பிரபாகரன் திடீரென எம்மை விட்டு மறைந்தமை குறித்து அதிர்ச்சியடைகின்றோம். தமிழ்மொழி மேல் கொண்டிருந்த பற்றின் காரணமாக எமது சங்க அங்கத்தவர்கள் மீதும் யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கத்தின் மீதும் மிகுந்த அபிமானம் கொண்டவராக அமரர் பிரபாகரன் விளங்கினார்.
துணைத்தூதரகத்துடன் இணைந்தான சங்கச் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதற்கு உறுதுணை புரிந்தார். தொழினுட்பத்துறை வல்லுநராகவும் கலைத்துறை திறனாளராகவும் விளங்கியமையால் தமிழியல் சார்ந்த செயற்பாடுகளை உயர்தொழினுட்பத்திறன்களுடன் முன்னெடுக்க வழிவகுத்தார்.
ஐம்பத்திரண்டு வயதில் இந்த மண்ணைவிட்டு அன்னார் பிரிந்தமை எம்மைப் பொறுத்தவரையில் மிகுந்த வேதனையை ஏற்படுத்தியுள்ளது. அன்னாரது இழப்பால் துயருறும் இந்தியத் துணைத்தூதரகத்தார் மற்றும் குடும்பத்தினருக்கு எமது ஆறுதலைத் தெரிவிப்பதுடன் அவருடைய குடும்ப உறுப்பினர்கள் விரைந்து நலம் பெறவும் பிரார்த்திக்கின்றோம். அன்னாரின் ஆன்மா சாந்தியடைவதாக
– யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கம்

தனிநாயகம் அடிகள் நினைவரங்கம் 2024

யாழ்ப்பாண தமிழ்ச் சங்கம் நடத்தும் தமழ் தூது தனிநாயகம் அடிகள் நினைவரங்கம் 04 10 2024 வெள்ளி மாலை 4 மணிக்கு யாழ் பிரதான வீதியில் உள்ள திருமறைக்கலாமன்றத்தின் கலைத் தூது கலையகத்தில் தமிழ்ச்சங்க உப தலைவர் அருட்பணி ஜெறோ செல்வநாயகம் அடிகளார் தலைமையில் நடைபெறவுள்ளது

இந்நிகழ்வில் தொடக்கவுரையை தமிழ்ச் சங்கத் தலைவர் பேராசிரியர் தி. வேல்நம்பியும் வாழ்த்துரையை தமிழ்ச் சங்கப் பெருந்தலைவர் பேராசிரியர் அ. சண்முகதாசும் மாணவர் உரையை புனித பத்திரிசியார் கல்லூரியின் குரு மாணவன் அன்ரனிகுமார் அனோஜும் ஆற்றுவர்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகக் கல்வியியல் துறை விரிவுரையாளர் இ. சர்வேஸ்வரா – இலங்கைப் பல்கலைக்கழக முறைமையில் சேர் பொன் அருணாச்சலத்தின் வகி பாகம் – தமிழ்த் தூது தனிநாயகம் அடிகளாரை உள்நிறுத்திய பார்வை என்ற பொருளில் நினைவுப் பேருரை ஆற்றுவார்

நிகழ்வில் தமிழ்ச் சங்க பொதுச் செயலாளர் ச. லலீசன் அறிமுகவுரையையும் திருமறைக்கலாமன்ற பிரதி இயக்குநர் யோன்சன் ராஜ்குமார் கருத்துரையையும் ஆட்சிக்குழு உறுப்பினர்களான நா. குமரிவேந்தன் வரவேற்புரையையும் யோ. நிவேதன் நன்றியுரையையும் வழங்குவர்.

சிறப்புற நடைபெற்ற தமிழ்ச் சங்கத்தின் ஆடிப்பிறப்பு விழா

யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கம் நடத்திய ஆடிப்பிறப்பு விழாவும் நவாலியூர் சோமசுந்தரப் புலவர் நினைவரங்கமும் இன்றையதினம்(17) காலை 11.30 மணிக்கு நவாலி மகாவித்தியாலயத்தில் தமிழ்ச் சங்கத் தலைவர் சிரேஷ்ட பேராசிரியர் தி.வேல்நம்பி தலைமையில் நடைபெற்றது.

நிகழ்வின் ஆரம்பத்தில் நவாலியூர் சோமசுந்தர புலவரின் திருவுருவச் சிலைக்கும் பாடசாலை நிறுவுனர் பண்டிதர் தம்பையாவின் திருவுருவச் சிலைக்கும் மாலை அணிவிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் பாடசாலை அதிபர் கி. கிருஷ்ணானந்தா வாழ்த்துரையையும், ஜீவா. சஜீவன்  தொடக்கவுரையையும் வழங்கினர்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக தமிழ்துறைப் பேராசிரியர், செல்வரஞ்சிதம் சிவசுப்பிரமணியம் ஆடிப்பிறப்பும் நவாலியூர் சோமசுந்தரப்புலவரும் என்ற பொருளில் சிறப்புரை ஆற்றினார்.  பாடசாலை மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன.

நிகழ்வில் தமிழ் சங்க பொதுச் செயலாளர் செந்தமிழ்ச் சொல்லருவி சந்திரமௌலீசன் லலீசன், யாழ்ப்பாணம் மறைக்கோட்ட முதல்வரும் தமிழ்ச் சங்கத்தின் உபதலைவருமாகிய அருட்பணி ஜெரோ செல்வநாயகம், யாழ்ப்பாண பல்கலைக்கழக கல்வியியல் துறை விரிவுரையாளர்களான கலாநிதி விஜயபாஸ்கர், ம. சத்தியகுமார், இ. சர்வேஸ்வரா நடனத்துறை முன்னாள் தலைவர் கலாநிதி கி. அருட்செல்வி தமிழ்ச் சங்க பொருளாளர் லோ. துஷிகரன் ஆட்சிக் குழு உறுப்பினர்காளான ந. ஐங்கரன் , செ. நிவேதன்,  விரிவுரையாளர் வேல் நந்தகுமார்  உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

 

தமிழ்ச்சங்கத்தின் ஆடிப்பிறப்பு விழாவும் சோமசுந்தரப் புலவர் நினைவரங்கமும் நவாலியில்

யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கம் நடத்தும் ஆடிப்பிறப்பு விழாவும் நவாலியூர் சோமசுந்தரப் புலவர் நினைவரங்கமும் 17.07.2024 புதன்கிழமை காலை 11 மணிக்கு நவாலி மகாவித்தியாலயத்தில் தமிழ்ச்சங்கத் தலைவர் சிரேஷ்ட பேராசிரியர் தி.வேல்நம்பி தலைமையில் நடைபெறவுள்ளது.

இந்நிகழ்வில் பாடசாலை அதிபர் கி. கிருஷ்ணானந்தா வாழ்த்துரையையும் ஜீவா. சஜீவன் தொடக்கவுரையையும் வழங்குவர். யாழ்ப்பாணப் பல்கலைக்கழக தமிழ்துறைப் பேராசிரியர்; செல்வரஞ்சிதம் சிவசுப்பிரமணியம் ஆடிப்பிறப்பும் நவாலியூர் சோமசுந்தரப்புலவரும் என்ற பொருளில் சிறப்புரை ஆற்றுவார். பாடசாலை மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளும் இடம்பெறும்.

 

யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கத்தின் புதிய நிர்வாகக் குழு பதவி ஏற்றது

யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கத்தின் புதிய நிர்வாகக் குழுத் தெரிவு சங்கத்தின் பெருந்தலைவர் வாணாள் பேராசிரியர் அ. சண்முகதாஸ் தலைமையில் 30.06.2024 ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கத்தின் தற்காலிக அலுவலகம் அமைந்துள்ள யாழ்ப்பாணம் சிறாம்பியடி ஒழுங்கையில் உள்ள கொசி விருந்தினர் விடுதியில் நடைபெற்றது. இதில் பின்வரும் தமிழ்ச்சங்க உறுப்பினர்கள் புதிய நிர்வாகக் குழுவிற்காக கடந்த ஆட்சிக்குழுவின் பரிந்துரை அடிப்படையிலும் பொதுக்கூட்டத்தி;ற்குச் சமுகமளித்தோரில் இருந்தான தெரிவின் அடிப்படையிலும் தெரிவு செய்யப்பட்டனர்.

பெருந்தலைவர் : பேராசிரியர் அ. சண்முகதாஸ் (வாழ்நாள் பேராசிரியர் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்)
தலைவர் – சிரேஸ்ட பேராசிரியர் தி. வேல்நம்பி (பீடாதிபதி, பட்டப்பின் படிப்புகள் பீடம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்
பொதுச் செயலாளர் – செந்தமிழ்ச்சொல்லருவி ச.லலீசன் (முதல்வர் கோப்பாய் ஆசிரியர் கலாசாலை)
பொருளாளர் – திரு. லோ. துஷிகரன் (மருத்துவசேவை உத்தியோகத்தர், யாழ். போதனா மருத்துவமனை)

உபதலைவர்கள்
அருட்பணி ஜெரோ செல்வநாயகம் (யாழ் மறைக்கோட்ட முதல்வர்)
சொல்லின் செல்வர் இரா. செல்வவடிவேல (சமூக செயற்பாட்டாளர்)
பேராசிரியர் சி. செல்வரஞ்சிதம் (தமிழ்த்துறை, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்)
திரு. பா. பாலகணேசன் (உபபீடாதிபதி, யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரி)

உபசெயலாளர்கள்
முனைவர் கி. அருட்செல்வி (சிரேஸ் விரிவுரையாளர், நடனத்துறை, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்)
திரு. கு. பாலசண்முகன் (விரிவுரையாளர், கோப்பாய் ஆசிரியர் கலாசாலை)

ஆட்சிக்குழு உறுப்பினர்கள்
………………………………..
முனைவர் மனோன்மணி சண்முகதாஸ் (ஓய்வுநிலை ஆய்வுப்பேராசிரியர், கக்சுயின் பல்கலைக்கழகம், தோக்கியோ)
திரு. நா. குமரிவேந்தன் (தனித்தமிழ் செயற்பாட்டாளர்)
திரு. ந. ஐங்கரன் (அபிவிருத்தி உத்தியோகத்தர், விவசாய அமைச்சு)
திரு. ஜீவா சஜீவன் (ஆசிரியர் தென்னாடு பத்திரிகை)
திரு. இ. .சர்வேஸ்வரா (விரிவுரையாளர், கல்வியியற்றுறை, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்)
திரு. வேல். நந்தகுமார் (விரிவுரையாளர், கோப்பாய் ஆசிரியர் கல்hசாலை)
திரு. சு. சுதர்சன் (உரிமையாளர், கொசி விருந்தினர் விடுதி)
திரு. யோ. நிவேதன் ( தமிழ்p)
திரு. தெ. ஹர்சன் (உதவி முகாமையாளர், மக்கள் வங்கி)
திருமதி. சிவநயனி சர்வேஸ்வரா (பதிவாளர் அலுவலகம், கச்சேரி யாழ்ப்பாணம்)
திருமதி சாந்தினி அருளானந்தம் (முதுநிலை விரிவுரையாளர, வரலாற்றுத்துறை, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்)
முனைவர் சுகன்யா அரவிந்தன் (முதுநிலை விரிவுரையாளர், இசைத்துறை, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்)
திரு. த.தவரூபன் (கணினி தொழினுட்பவியலாளர்)
லயன் சி. ஜெயசங்;கர் (சமூக செயற்பாட்டாளர் வரணி)
திரு. ச. விசாகனன் (கணினி பொறியியலாளர்)
திரு. சி. சிவஸ்கந்தசிறி (சட்டத்தரணி)
திரு. சி. சசீவன் (உதவி முகாமையாளர், மக்கள் வங்கி)
திரு. பொ. அரவிந்தன் (அதிபர், விக்னேஸ்வரக் கல்லூரி, கரவெட்டி)
திரு. த. கருணாகரன் (உதவி முகாமையாளர் சமுர்த்தி வங்கி கைதடி)
திரு. அற்புதம் சகாயமரிய ஃபீலிக்ஸ் (ஓய்வுபெற்ற அதிபர்)
திரு.வ. வடிவழகையன் (கிராம அலுவலர், காரைநகர்)

தமிழ்ச்சங்கத்தின் முப்பெரும் நிகழ்வுகள்

யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கம் நடத்திய சங்கப்பேழை நூல்வெளியீடு, உலகத் தாய்மொழிநாள் பேருரை மற்றும் 2019 உயர்தரப் பரீட்சையில் தமிழ்ப்பாடத்தில் அதிவிசேட சித்தி பெற்ற வடமாகாண மாணவர்கள் 154 பேருக்கான மதிப்பளிப்பு ஆகிய மூன்று நிகழ்வுகள்  கடந்த 19.03.2022 சனிக்கிழமை காலை 9 மணிக்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நூலகக் கேட்போர் கூடத்தில் நடைபெற்றன. 

தமிழ்ச்சங்கப் பெருந்தலைவர் பேராசிரியர் அ.சண்முகதாஸ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வுகளில் பிரதம விருந்தினராக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் சி. சிறீசற்குணராசா கலந்து கொண்டார். 

நிகழ்வில் வரவேற்புரையை யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கத் தலைவர் செந்தமிழ்ச்சொல்லருவி ச.லலீசனும் தமிழ்மொழிநாள் பேருரையை கிழக்குப் பல்கலைக்கழக மொழித்துறைத் தலைவர் பேராசிரியர் சி. சந்திரசேகரமும் அவருக்கான அறிமுகவுரையை யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கப் பொருளாளர் பேராசிரியர் தி.வேல்நம்பியும் சங்கப்பேழை நூல் வெளியீட்டுரையை நூலின் பதிப்பாசிரியர் லோ. துசிகரனும் நூலாய்வுரையை பேராதனைப் பல்கலைக்கழக வாழ்நாள் பேராசிரியர் வ.மகேஸ்வரனும் ஆற்றினர். நன்றியுரையை சங்கத்தின் ஆட்சிக்குழு உறுப்பினர் கு. பாலசண்முகனும் நிகழ்ச்சி முன்னிலைப்படுத்தலை சங்கச் செயலாளர் இ.சர்வேஸ்வராவும் மேற்கொண்டனர்.

சங்கப்பேழை நூலை தமிழ்ச்சங்கப் பெருந்தலைவர் பேராசிரியர் அ.சண்முகதாஸ் வெளியிட்டு வைக்க அதன் முதற்பிரதியை துணைவேந்தர் பேராசிரியர் சி. சிறீசற்குணராசா பெற்றுக்கொண்டார். 

நிகழ்வில் மாகாண மற்றும் வலயங்களின் தமிழ்ப்பாட உதவிக் கல்விப் பணிப்பாளர்கள், பாடசாலை அதிபர்கள் தமிழாசிரியர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர். 

கௌரவம் பெற்ற மாணவர்களுக்கு ஐயாயிரம் ரூபா பணப்பரிசில், ஐந்து பெறுமதியான புத்தகங்கள் அடங்கிய பொதி மற்றும் சான்றிதழ் என்பன வழங்கப்பட்டன. 

[ngg src=”galleries” ids=”15″ display=”basic_thumbnail” thumbnail_crop=”0″]