வரலாறு

tamil_smallயாழ்ப்பாணத் தமிழரசர் காலத்தில் சிங்கைப் பரராசசேகரனும் சிங்கை செகராசசேகரனும் யாழ்ப்பாணத்தில் தமிழ்ச் சங்கம் நிறுவி தமிழை வளர்த்தும் தமிழ்க் கல்வியைப் பரப்பியும் வந்தனர். பின்னர் நூலங்களும்
கல்விக்கூடங்களாகத் திகழ்ந்த கோவில்களும் போத்துக்கேயரால் அழிக்கப்பட்டன.  இதனால் போத்துக்கேயர் காலத்தில் தமிழ்க் கல்வி மிகவும் பின்தங்கிய நிலையை அடைந்திருந்தது. பின்னர் ஒல்லாந்தர் காலத்திலும் ஆங்கிலேயர் காலத்திலும் ஈழநாட்டில் தமிழ்க் கல்வி மிண்டும் வளர்ச்சியடையலாயிற்று. பத்தொன்பதாம் நூற்றாண்டின் கடைப் பகுதியில் உச்ச நிலையை அடைந்திருந்தது. தமிழ் பேசும் உலகெல்லாம் போற்றும் புலவர்கள் பெருவாரியாக யாழ்ப்பாணத்தில் வாழ்ந்த இக்காலத்தில் திரு த.கைலாசபிள்ளை அவர்கள் யாழ்ப்பாணத்தில் ஒரு தமிழ்ச் சங்கத்தை 1900 ஆம் ஆண்டு நிறுவினார். இச்சங்கத்தில் கொக்குவில் சி.சபாரத்தின முதலியார் செயலாளராகவும், சுன்னாகம் குமாரசுவாமிப் புலவரவர்கள் தலைமைத் தேர்வாளராகவும் மற்றும் சிறப்பு ஆலோசகராகவும் பணியாற்றினர். ஆ.முத்துத்தம்பிப்பிள்ளை, வட்டுக்கோட்டை ஆறுமுக உபாத்தியாயர், ஊரெழு சு.சரவணமுத்துப் புலவர் மற்றும் நல்லூர் வே.கனகசபாபதி ஐயர் முதலியோர் உறுப்பினராகவும் இடம்பெற்றனர். 1913ஆம் ஆண்டு சென்னை அரசு தமிழ் அகராதி ஒன்றைத் தொகுக்கும் பொருட்டு பாதிரியார் சாண்டிலர் தலைமையில் ஒரு குழு அமைத்தது. இக்குழுவினர் அகராதியின் மாதிரி நகல் ஒன்றை யாழ்ப்பாண தமிழ்ச் சங்கத்திற்கு அனுப்பினர். சங்கத்தினர் இதனை ஆராய்ந்து அறிக்கை வரையும் பொறுப்பை புலவரிடம் ஒப்படைத்தனர். 04.04.1913 இல் இடம்பெற்ற சங்கக் கூட்டத்தில் புலவரின் இவ்வறிக்கை நீண்ட தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது. புலவரால் அறிக்கையில் கூறப்பட்ட பிழைகள் எல்லாவற்றையும் வாசித்து ஆறிந்த சாண்டிலர் யாழ்ப்பாணம் வந்து புலவரை உடுவில் மகளிர் பாடசாலையில் சந்தித்து பல தடவை அகராதி தொடர்பாக; கலந்துரையாடினார். சாண்டிலர் புலவரின் ஆழ்ந்தறிவை மெச்சி அவரின் அறிவுரைப்படி பல திருத்தங்களை அகராதியில் செய்திருந்தார். புலவர் தனது வாழ்நாள் முழுவதும் யாழ்ப்பாணத் தமிழ்ச் சங்கத்தில் உறுப்பினராக விளங்கி, அதன் சார்பாகப் பல கட்டுரைகளும் சொற்பொழிவுகளும் வழங்கியுள்ளார்.

இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்திலே உருவாக்கப்பட்ட தமிழ்ச் சங்கமும் பின்னர் வலுவிழந்து போயிற்று. கொழும்பு, மன்னார், வவுனியா,கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களிலே தமிழச் A.Shanmugathasசங்கம் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் யாழப்பாணத்திலே ஒரு தமிழ்ச் சங்கம் ஏன் அமைக்கப்பட வில்லை எனப் பலர் என்னைக் கேட்டுள்ளனர். இப்படி பலருடைய விருப்பத்தின் விளைவே இன்று இப்பொழுது நடைபெறும் யாழ்ப்பாணத் தமிழ்ச் சங்கத் தொடக்க நிகழ்வாகும். இன்று இச் சங்கத்தின் தேவை பெரிதாகும். இது மொழி,பண்பாடு தொடர்பான பல பாரிய பணிகளை ஆற்றவேண்டியுள்ளது.

10.06.2012 ஞாயிற்றுக்கிழமை நாவலர் கலாசார மண்டபத்தில் நடைபெற்ற யாழப்பாணத் தமிழ்ச் சங்கத் தொடக்க நிகழ்வில் தலைமை தாங்கிய பேராசிரியர் அ.சண்முகதாஸ் மேற்கண்டவாறு கூறினார்.

தற்காலிகமாக அமைக்கப்பட்ட நிர்வாகக் குழுவின் தலைவராக பேராசிரியர் அ.சண்முகதாஸ், துணைத் தலைவர்களாக செஞ்சொற் செல்வர் கலாநிதி ஆறு.திருமுருகன், அதிவண.கலாநிதி எஸ்.ஜெபநேசன், பேராசிரியர் எஸ்.சிவலிங்கராசா, கலாநிதி க.குணராசா,திரு.சிவ.மகாலிங்கம், செயலாளராக திரு.இரா.செல்வவடிவேல், துணைச் செயலாளர்களாக திரு.ச.லலீசன், திரு.நாக.தமிழிந்திரன்,பொருளாளராக பேராசிரியர் தி.வேல்நம்பி ஆகியோர் பணியாற்றவுள்ளனர். மேலும் 25 பேரைக்கொண்ட ஆட்சிக்குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.

சங்கத் தொடக்க நிகழ்வில் பங்குபற்றிய பேராசிரியர் கி.விசாகரூபன், கலாநிதி வண.ஜெபநேசன், திரு.தே.தேவானந்த், திரு.கு.ரஜீபன், வண.ஜேறோம் செல்வநாயகம் அடிகளார், திரு.ந.விஜயசுந்தரம் ஆகியோர் தமிழ்ச் சங்க அமைப்பு, எதிர்கால நடவடிக்கைகள்,கட்டமைப்பு, விரிவாக்கம் தொடர்பான பல பயன்மிகு கருத்துக்களைக் கூறினர். சங்க உறுப்பினருக்கான ஆண்டுச் சந்தா ரூபா 250 எனவும் ஆயுட்சந்தா ரூபா 3000 எனவும் அறிவிக்கப்பட்டது. உறுப்பினர்களைச் சேர்ப்பதற்குரிய நடவடிககைகளை எடுப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டது.

ஆவணப்படுத்தியவர்

ச.லலீசன்

Comments are closed.