சிறப்புற்ற திருவள்ளுவர் விழா- 2019

யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கம் முன்னெடுத்த திருவள்ளுவர் விழா கடந்த 09.03.2019 சனிக்கிழமை நல்லூர் துர்க்காதேவி மணிமண்டபத்தில் சிறப்புற நடைபெற்றது.

யாழ். சிவகணேசன் புடைவைகயத்தின் ஆதரவில் நடைபெற்ற இந்நிகழ்விற்குத் தமிழ்ச்சங்கத் தலைவர் செந்தமிழ்ச்சொல்லருவி ச.லலீசன் தலைமை தாங்கினார்.

நிகழ்வில் கடவுள் வாழ்த்தை யாழ். பல்கலைக்கழக இசைத்துறை விரிவுரையாளர் ந.பரந்தாமன் இசைத்தார். வரவேற்புரையை தமிழ்ச்சங்கத்தின் பொதுச் செயலர் விரிவுரையாளர் இ.சர்வேஸ்வராவும் முதன்மையுரையை பேராசிரியர் எஸ்.சிவலிங்கராஜாவும் ஆற்றினர்.

சிறப்பு நிகழ்வாக தமிழகத்தின் பிரபல பேச்சாளர் இலக்கியச்சுடர் த.இராமலிங்கம் தலைமையில் “சிந்தையின் செழுமைக்குப் பெரிதும் வழிகாட்டும் குறட்பாக்கள் அடங்கியிருப்பது அறத்துப்பாலிலா? பொருட்பாலிலா? என்ற பொருளில் பட்டிமண்டபம் இடம்பெற்றது. இதில் சிரேஷ்ட பேராசிரியர் தி. வேல்நம்பி, சொல்லின் செல்வர் இரா.செல்வவடிவேல், விரிவுரையாளர் கு.பாலசண்முகன், தமிழகப் பேச்சாளர் த.திருமாறன், லோ.துஷிகரன், ஜீவா.சஜீவன் ஆகியோர் வாதிகளாகவும் பிரதிவாதிகளாகவும் கலந்து கொண்டனர். நல்லூர் லயன்ஸ் கழகத் தலைவர் க.அருள்நேசன் நன்றியுரை ஆற்றினார்.

திருவள்ளுவர் விழாவையொட்டித் தமிழ்ச்சங்கத்தாரால் யாழ். மாவட்டப் பாடசாலைகளில் உயர்தர வகுப்புக்களில் தமிழ்ப்பாடத்தைக் கற்கும் மாணவரிடையே திருக்குறள் தேர்வு நடத்தப்பட்டிருந்தது. 620 மாணவர்கள் பங்கேற்ற இத்தேர்வு யாழ்ப்பாணப் பல்கலைக்கழகப் பரீட்சை மண்டபங்களில் நடைபெற்றிருந்தது. இத்தேர்வில் வெற்றியீட்டிய மாணவர்களுக்கும் வெற்றி பெற உதவிய ஆசிரியர்களுக்கும் பரிசுப் பொருட்களும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. 

பரிசில் வழங்கலைப் போட்டியின் இணைப்பாளர் விரிவுரையாளர் கு.பாலசண்முகன் நெறிப்படுத்தினார்.

(படங்கள் – பதும் றணசிங்கே (Pathum Ranasinghe), யாழ். பல்கலைக்கழகம்)

Bookmark the permalink.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*