தமிழறிஞர் கலாநிதி க. சிவராமலிங்கம்பிள்ளை நினைவு விவாதச்சமர் – யாழ். இந்துக் கல்லூரி இவ்வாண்டும் வெற்றிக்கிண்ணத்தைச் சுவீகரித்தது.

யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கத்தால் பாடசாலை மாணவர்களிடையே நடத்தப்பட்ட தமிழறிஞர் கலாநிதி க. சிவராமலிங்கம்பிள்ளை நினைவு விவாதச்சமர் இன்று (08.02.2020) சனிக்கிழமை காலை 9 மணி தொடக்கம் இரவு 7.30 மணி வரை யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் நடைபெற்றது.

யாழ்ப்பாணத்தின் பிரபல விவாத அணிகளைக் கொண்ட பாடசாலைகளுடன் கிளிநொச்சி, வவுனியா, திருகோணமலை, கொழும்பு பிரதேசப் பாடசாலைகளும் இணைந்து 22 அணிகள் போட்டியில் பங்கேற்றன.

தம்பர் மண்டபத்தில் இரவு இடம்பெற்ற இறுதிப்போட்டியில் தெல்லிப்பளை யூனியன் கல்லூரி யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியை எதிர்கொண்டது. ஏழு நடுவர்களுள் ஐந்துக்கு இரண்டு என்ற கணக்கில் யாழ். இந்துக் கல்லூரி அணி வெற்றிக்கிண்ணத்தைச் சுவீகரித்தது.

போட்டியின் இரண்டாம் இடத்தை தெல்லிப்பளை யூனியன் கல்லூரியும் மூன்றாம் இடத்தை வவுனியா சைவப்பிரகாச மகளிர் கல்லூரி மற்றும் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி என்பனவும் பெற்றுக்கொண்டன.

போட்டித் தொடரில் கனவான் தன்மையுடன் (Gentlemen ship) நடத்தைகளை வெளிக்காட்டிய அணிக்கான விருதும் வழங்கப்பட்டது. இதனை திருகோணமலை கோணேஸ்வரா இந்துக் கல்லூரி பெற்றுக்கொண்டது.

மிகச்சிறந்த விவாதிக்கான விருதை யாழ். மத்திய கல்லூரி விவாத அணித்தலைவர் கு.மோகிதன் பெற்றுக்கொண்டார்.

மாணவ நடுவர்களுக்கான போட்டியும் நடைபெற்றது. இதில் பதினாறு பேர் பங்கேற்றிருந்தனர். போட்டிகள் முடிவடைந்த பின்னர் நடுவர்கள் முன்னால் வெற்றி பெறும் அணி எது என்பதைத் தமது நியாயப்படுத்தல்களுடன் இவர்கள் வெளிப்படுத்தினர் இதன் அடிப்படையில் யாழ். இந்துக்கல்லூரி மாணவன் ச. அபினாத் முதற்பரிசைப் பெற்றார்.

நாற்பதுக்கும் மேற்பட்டோர் நடுவர்களாகச் செயற்பட்ட இந்நிகழ்வில் நடுவர்களாகப் பங்கேற்றோருக்கு நினைவுச் சின்னங்கள்வழங்கப்பட்டன.

போட்டியின் இணைப்பாளராக தமிழ்ச்சங்கத்தின் ஆட்சிக்குழு உறுப்பினர் சி.சிவஸ்கந்தசிறியும்; உதவி இணைப்பாளராக சி.விசாகனனும் செயற்பட்டு – சிறப்பாகப் போட்டிகளை ஒழுங்குபடுத்தியமைக்காகப் பலரது பாராட்டுக்களையும் பெற்றுக்கொண்டனர்.

யாழ். மத்திய கல்லூரி அதிபர் தம்பர் மண்டபத்தை வழங்கியதோடல்லாமல்; போட்டி நடைபெறுவதற்காகப் பதினொரு களங்களையும் ஏற்படுத்தி வழங்கியிருந்தார்.

(படங்கள் நிகழ்வின் இறுதிப்போட்டியின் போது எடுக்கப்பட்டவை)

Bookmark the permalink.

Leave a Reply