தமிழ்ச்சங்கத்தின் உபதலைவர் செஞ்சொற்செல்வரின் உள்ளத்திலிருந்து….

thiuruஎங்கள் மண்ணில் தாய்மொழியாம் தமிழ்மொழியைக் காத்திடுவதற்கு உருவான தமிழ்ச்சங்கத்தை வாழ்த்துகின்றேன். இன்றைய சூழலில் எம்தலைமுறையை தாய்மொழி மீது உணர்வுபூர்வமான நேசிப்பினை ஏற்படுத்துவதற்கு இச்சங்கம் அத்தியாவசியமானது.

யாழ்ப்பாணத்தில்  சென்ற நூற்றாண்டில் செல்வாக்கு மிக்க அமைப்பாகத் தமிழ்ச்சங்கம் செயற்பட்டதை ஈழத்தமிழர் வரலாறு கூறுகின்றது. எனினும் காலமாற்றங்களினால் யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கம் அருகிப்போனது. இந்நிலையைப் பலர் வாய்மொழியாகக் கூறி வந்தனர். இதற்குச் செயலுருக்கொடுக்கும் வகையில் முயற்சியில் மூத்தோரும் இளையோரும் இணைந்து 2012 ஆம் ஆண்டில் தமிழ்ச்சங்கம் ஒன்றை மீளவும் உருவாக்கியிருக்கின்றோம். இச்சங்கத்தில் ஓர் உபதலைவராக செயற்படும் பாக்கியம் சிறியேனுக்கும் கிட்டியதையிட்டு மிகவும் மகிழ்ச்சியடைகின்றேன்.

யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கத்தின் முயற்சியினால் இன்று நல்ல தமிழ் விழாக்கள் எம்மண்ணில் நடைபெற்று வருகின்றன. இவ்விழாக்களில் பலர் கலந்துகொண்டு அகமகிழ்ந்து வருவதைச் சந்தித்துக்கொண்டிருக்கின்றேன்.

புதிய தலைமுறையொன்று இச்சங்கத்தின் ஊடாக வளர்க்கப்படுவதை அனைவரும் ஏற்றுக்கொள்கின்றார்கள். எங்கள் மண்ணில் தமிழின் அழகு மாசுபடாமல் பேணுவதற்கு இச்சங்கம் எதிர்காலத்தில் ஆக்கபூர்வமான செயற்றிட்டங்களை முன்னெடுக்கவுள்ளது.

இன்று தொலைக்காட்சி, வானொலி, பேச்சு நடை அனைத்திலும் பிறழ்வுகள் ஏற்பட்டுள்ளன. யாழ்ப்பாணத் தமிழ்நடையை யாசிப்பதற்கு பலநாடுகளில் வாழும் தமிழர்கள் ஆவலாகக் காத்துள்ளனர். மூலவேராக விளங்கும் எம்மண்ணில் மொழிநடை மாசடைந்துவிட்டால் இனிமேல் எஞ்சுவதற்கு என்ன உண்டு?

மொழியைக் காப்பாற்றுவதே எம்மினத்துக்கு நாம் செய்யும் உன்னத கடமையாகும். மொழி பாதுகாக்கப்படாவிட்டால் நாம் எவற்றைப் பெற்றும் பயனின்றிப் போய்விடும்.

பல நாடுகளில் வாழ்ந்த தமிழர்கள் தாய்மொழி பற்றிய அக்கறையைக் கருத்திற்கொள்ளாது விட்ட காரணத்தால் தம் சொந்த மொழியை இழந்துவிட்டார்கள். தென் ஆபிரிக்கா, மொரிசீயஸ், பர்மா, இந்தோனேசியா, கம்போடியா போன்ற நாடுகளில் தமிழர்கள் இன்றும் வாழ்கின்றார்கள். தமிழ் தெரியாது வாழ்கின்றார்கள். இரவல் மொழியில் வாழ்கின்றார்கள். இந்தப் பரிதாப நிலை மலேசியா சிங்கப்பூர் போன்ற நாடுகிளிலும் ஏற்படத் தொடங்கிவிட்டது.

புலம் பெயர்ந்து வாழும் எம்மவர்களின் சந்ததியும் தாய்மொழியைப் பிரயோகிக்கும் என்பதில் நம்பிக்கையில்லை. எனவேதான் எம்மண்ணில் மொழியின் அடையாளம் சீராக நிலைபெறுவதற்கு தமிழ்ச்சங்கத்தின் அத்தியாவசியம் அவசியமானது. இச்சங்கத்தை வலிமைப்படுத்தி வளர்த்தெடுக்கவேண்டிய பொறுப்பு அனைத்து யாழ்ப்பாணச் சமூகத்திற்கும் உரியது.

இச்சங்கம் எதிர்காலத்தில் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடுகளையும் யாழ். மண்ணில் நடாத்த வேண்டும் என்பது எம்கனவாகும். அத்தகைய கனவுகள் நனவாவதற்கு அனைவரும் ஒன்றிணைந்து சங்கத்தை வளர்த்தெடுக்க வாருங்கள்.

நிறுவனரீதியாக யாழ்ப்பாணச் சமூகம் நின்றுபிடிப்பதில்லை என்ற குற்றச்சாட்டை இந்தத்தலைமுறையும் சந்திக்கக் கூடாது என்பது என் அவா. இச்சங்கம் சூரியசந்திரர் உள்ளவரை தொடர்ந்து கட்டியெழுப்பப்பட வேண்டும் என்று இறைவனைப் பிரார்த்திக்கின்றேன்.
இச்சங்கத்தின் வளர்ச்சியில் அயராது உழைக்கும் நிர்வாக சபை உறுப்பினர்களின் ஆர்வம் நம்பிக்கை தருகின்றது.
நம்தாய் மொழியின் வாழ்வுக்காகத் தமிழ்ச்சங்கத்தை வாழ்விப்போம்.
நன்றி
கலாநிதி ஆறு.திருமுருகன்
உபதலைவர், யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கம்.

Bookmark the permalink.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*