சாகித்தியரத்னா மருத்துவர் தி. ஞானசேகரன் அவர்களின் மறைவுக்கு யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
யாழ்ப்பாணம் புன்னாலைக்கட்டுவன் – ஈவினையைப் பூர்வீகமாகக் கொண்ட இவர் 2000 யூன் 06 ஆம் திகதி தொடக்கம் ஞானம் என்ற இலக்கிய சஞ்சிகையை வெளியிடத் தொடங்கி இளையோரை எழுத்துத் துறையில் ஊக்குவித்து வந்தார். இச்சஞ்சிகை அச்சு வடிவிலும் இணையவழியிலும் வெளிவருகின்றது. ஞானம் 150 ஆவது இதழ் போரிலக்கியச் சிறப்பிதழாக வெளிவந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.
மரபுவழிக் கல்வியை வீட்டுச் சூழலினால் பெற்றுக்கொண்ட இவர் நவீன இலக்கியப் பயிற்சியை வாசிப்பின் மூலம் தமதாக்கிக்கொண்டார். சிறுகதை நாவல் என நவீன இலக்கியத் தளங்களில் தடம் பதித்தார்.
1972 இல் காலதரிசனம் என்ற சிறுகதைத் தொகுதி மூலம் சிறுகதை உலகிற்குள் கால்பதித்தார். இவரது சிறுகதைகள் மாணவர்களுக்குப் பாடநூலாக உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
சாதியத்திற்கு எதிராக புதிய சுவடுகள் என்ற நாவலை வெளியிட்டார். மலையக மக்களை மையப்படுத்தி குருதிமலை என்ற நாவலை வெளியிட்டார். இந்த நூல் மதுரை அமெரிக்கன் பல்கலைக்கழகத்தில் பாடநூலாக உள்ளது. கவ்வாத்து என்ற நாவலையும் இவர் வெளியிட்டுள்ளார்.
இவரது புதல்வர் ஞானம் பாலச்சந்திரன் யாழ்ப்பாண மன்னர் நிறுவிய தமிழ்ச்சங்கம் என யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கத்தின் தொன்மை குறித்த நூல் ஒன்றை எழுதியுள்ளார் இதில் யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கம் நான்காம் தமிழ்ச்சங்கம் என்று சான்றுப்படுத்திப் பதிவு செய்துள்ளார்.
எழுத்துலகில் சாதனை மனிதராக வாழ்ந்த சாகித்தியரத்னா மருத்துவர் தி. ஞானசேகரனின் இழப்பினால் துயருறும் அனைவருக்கும் எமது ஆறுதலைத் தெரிவிப்பதுடன் அன்னாரின் ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.
– யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கம்


