சிறப்புற்ற நாவலர் விழா -2019

யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கமும், கரிகணன் அச்சகத்தாரும் இணைந்து நடாத்திய ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் நினைவரங்க விழா நேற்றுச் சனிக்கிழமை(30-11-2019)காலை-09 மணி முதல் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் கொட்டும் மழைக்கு மத்தியிலும் சிறப்புற நடைபெற்றது. யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கத்தின் உபதலைவரும், பிரபல ஆன்மீகச் சொற்பொழிவாளருமான செஞ்சொற்செல்வர் கலாநிதி ஆறு.திருமுருகன் தலைமையில் இடம்பெற்ற குறித்த விழாவில் யாழ். இந்துக் கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள நாவலர் பெருமானின் திருவுருவச் சிலைக்கு வழிபாடுகள் நடைபெற்றன. செஞ்சொற்செல்வர் கலாநிதி ஆறு.திருமுருகன், யாழ்ப்பாணத் தமிழ்ச் சங்கத் தலைவர் செந்தமிழ்ச் சொல்லருவி ச. லலீசன் மற்றும் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் பிரதி அதிபர் சு. பரமேஸ்வரன் ஆகியோர் மலர்மாலைகள் அணிவித்து வணக்கம் செலுத்தினர்.தொடர்ந்து நாவலர் பெருமானின் உருவச் சிலைக்கு முன்பாக நல்லை ஆதீன முதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர பரமாச்சாரிய சுவாமிகள், செஞ்சொற்செல்வர் கலாநிதி ஆறு. திருமுருகன், செந்தமிழ்ச் சொல்லருவி ச. லலீசன் மற்றும் மாணவர்கள், ஆசிரியர்கள் திருவிளக்கேற்றி வழிபாடுகள் நிகழ்த்தினர்.
அதனைத் தொடர்ந்து கல்லூரியின் சபாலிங்கம் மண்டபத்தில் திருமதி- யாழினி ராஜ்குமாரின் மங்கல விளக்கேற்றல் மற்றும் மங்கள இசையுடன் நிகழ்வுகள் ஆரம்பமானது. அதனைத் தொடர்ந்து நல்லை ஆதீன முதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தரதேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் ஆசியுரையையும், யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் பிரதி அதிபர் சு. பரமேஸ்வரன் வாழ்த்துரையையும், யாழ்ப்பாணத் தமிழ்ச் சங்கத்தின் தலைவர் செந்தமிழ்ச் சொல்லருவி ச. லலீசன் தொடக்கவுரையையும் ஆற்றினர்.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக இந்துநாகரீகத் துறைத் தலைவர் ச.முகுந்தன் “நாவலர் கருத்தியல் குறித்த பரபக்க விமர்சனங்களை முன்னிறுத்திய உரையாடல்” எனும் தலைப்பில் நினைவுப் பேருரையாற்றினார். அதனைத் தொடர்ந்து “இன்றைய இளையோர் நாவலர் பாதையில் பயணிக்கின்றனரா? இல்லையா?” எனும் தலைப்பில் யாழ்ப்பாணத் தமிழ்ச் சங்கத்தின் உபதலைவர் சொல்லின் செல்வர் இரா.செல்வவடிவேலை நடுவராகக் கொண்டு இளைய தலைமுறைப் பேச்சாளர்களான மாணவ- மாணவியரின் பட்டிமண்டபம் நடைபெற்றது. மாணவ- மாணவியர் மிகவும் சிறந்த முறையில் விவாதித்தனர். தொடர்ந்து யாழ்ப்பாணத் தமிழ்ச் சங்கப் பெருந்தலைவர் பேராசிரியர் அ. சண்முகதாஸ் நிறைவுரையாற்றினார். அதனைத் தொடர்ந்து நாவலர் நாளையொட்டிப் பாடசாலை மாணவர்களிடையே நடாத்தப்பட்ட தமிழறிவுப் போட்டிகளில் வெற்றியீட்டியவர்களுக்கான பரிசில்களும், சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டன. குறித்த போட்டிகளில் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மூன்றாமிடத்தையும், யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி இரண்டாமிடத்தையும், வட்டுக் கோட்டை இந்துக் கல்லூரி முதலாமிடத்தையும் பெற்றுக் கொண்டன.

வெற்றியீட்டிய மாணவிகளில் பலரும் பேராசிரியர் அ. சண்முகதாஸின் கால்களில் விழுந்து ஆசிர்வாதம் பெற்றுக் கொண்ட பின்னர் தமக்கான பரிசில்களையும், சான்றிதழ்களையும் பெற்றுக் கொண்டமை விழாவில் கலந்து கொண்ட அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.மேற்படி விழாவில் கொட்டும் மழைக்கு மத்தியிலும் விழாவில் உரையாற்றிய பெருந்தகைகளுடன் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கல்வியியல்துறைப் பேராசிரியர் மா. சின்னத்தம்பி, யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முகாமைத்துவக் கற்கைகள் வணிக பீடப் பீடாதிபதி பேராசிரியர் கலாநிதி- தி. வேல்நம்பி, ஆன்மீக எழுத்தாளர் இராசையா ஸ்ரீதரன், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக இந்துக் கற்கைகள் பீடத்தின் விரிவுரையாளர்கள், கோப்பாய் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையின் ஆசிரிய மாணவர்கள், யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி மாணவர்கள் மற்றும் ஏனைய பாடசாலை மாணவ மாணவிகள், அதிபர்கள், ஆசிரியர்கள், யாழ்ப்பாணத் தமிழ்ச் சங்க உறுப்பினர்கள், ஆர்வலர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

Bookmark the permalink.

Comments are closed.