பாரதியார் பிறந்தநாளில் தமிழ்ச் சங்க வழிபாடு

மகாகவி பாரதியாரின் 139 ஆவது பிறந்தநாளான 11.12.2021 சனிக்கிழமை யாழ்ப்பாணம் நல்லூர் அரசடியில் உள்ள அவரது திருவுருவச்சிலைக்கு மாலை அணிவித்தும் மலர் தூவியும் வணக்கம் செலுத்தப்பட்டது.
கொவிட் பாதுகாப்பு நடைமுறைகளைக் கடுமையாகக் கைக்கொண்டு நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது.
இந்தியத் துணைத்தூதர் ராகேஸ் நட்ராஜ், யாழ். மாநகர முதல்வர் சட்டத்தரணி வி. மணிவண்ணன், யாழ். மாநகர ஆணையாளர் கவிஞர் த. ஜெயசீலன் யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கத் தலைவர் ச.லலீசன், ஆட்சிக்குழு உறுப்பினர் கு.பாலசண்முகன் உள்ளிட்டோர் மாலை அணிவித்தும் மலர்கள் அர்ப்பணித்தும் வணக்கம் செலுத்தினர்.
கடந்த 2017 ஆம் ஆண்டு தொடக்கம் இந்நிகழ்வு யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கமும் இந்தியத் துணைத்தூதரகமும் இணைந்து முன்னெடுக்கும் நிகழ்வாக இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 2019 ஆம் ஆண்டின் பின்னர் கொவிட் நெருக்கடி காரணமாக இணைந்து நிகழ்வு முன்னெடுக்கப்படவில்லை.
 
 
 

சிறப்புற்ற தமிழ்ச் சங்கத்தின் நாவலர் நினைவரங்கம் -2021

சைவத்துக்கும், தமிழுக்கும் அளப்பரிய பணிகளாற்றியவரும், ஐந்தாம் குரவர் எனப் போற்றப்படுபவருமான சைவத்தின் காவலர் ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் குருபூசை நன்னாளான நேற்றுச் சனிக்கிழமை(27.11.2021) முற்பகல் யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கத்தின் ஏற்பாட்டில் ‘நாவலர் நினைவரங்கம்’ அவர் வாழ்ந்த புனித மண்ணான யாழ்ப்பாணம் நாவலர் கலாசார மண்டபத்தில் நடைபெற்றது.நாவலர் கலாசார மண்டபத்தின் முன்பாகப் புதிதாக அமைக்கப்பட்டுள்ள ஆறுமுகநாவலர் திருவுருவச் சிலையடியில் இடம்பெற்ற வழிபாட்டில் யாழ்ப்பாணத் தமிழ்ச் சங்க உப தலைவரும், தெல்லிப்பழை ஸ்ரீதுர்க்காதேவி ஆலயத் தலைவரும், பிரபல ஆன்மீகச் சொற்பொழிவாளருமான செஞ்சொற்செல்வர் கலாநிதி ஆறு.திருமுருகன் கலந்து கொண்டு ஆறுமுகநாவலருக்கு மலர்மாலை அணிவித்தும், மலர் தூவியும் வணக்கம் செலுத்தினார்.

தொடர்ந்து யாழ்ப்பாணத் தமிழ்ச் சங்கத் தலைவரும், கோப்பாய் ஆசிரிய பயிற்சிக் கலாசாலையின் பிரதி முதல்வருமான செந்தமிழ்ச் சொல்லருவி ச.லலீசன் தலைமையில் ஆரம்பமான நிகழ்வில் யாழ்ப்பாணத் தமிழ்ச் சங்கத்தின் பெருந்தலைவரும், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் வாழ்நாள் பேராசிரியருமான கலாநிதி அ.சண்முகதாஸ், பேராசிரியை கலாநிதி.திருமதி.மனோன்மணி சண்முகதாஸ் உள்ளிட்டோர் மங்கல விளக்கேற்றி வைத்தனர்.

தொடர்ந்து கடவுள் வணக்கமும் நாவலர் வாழ்த்தும் பண்ணுடன் ஓதப்பட்டது. வரவேற்புரையைத் தொடர்ந்து தொடக்கவுரையை செஞ்சொற்செல்வர் கலாநிதி ஆறு.திருமுருகன் ஆற்றினார். தொடர்ந்து தேசிய மட்டத்தில் விசேட தேவையுடையோருக்கான சிறந்த பாடசாலைகளில் முதலாம் இடத்தினை நிலைநாட்டி கோண்டாவில் சிவபூமி மனவிருத்தி பாடசாலை விருதினை வியாழக்கிழமை(25) பெற்றிருந்தது. இதனைப் பாராட்டிக் கெளரவிக்கும் முகமாக சிவபூமி அறக்கட்டளையின் தலைவர் செஞ்சொற்செல்வர் கலாநிதி திரு.ஆறுதிருமுருகன் யாழ்ப்பாணத் தமிழ்ச் சங்கத்தின் சார்பில் யாழ்.மாநகரசபை முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணன், பேராசிரியர் அ.சண்முகதாஸ் ஆகியோரால் சிறப்பாக கெளரவிக்கப்பட்டார்.

யாழ்.மாநகரசபையின் ஆணையாளர் த.ஜெயசீலன் வாழ்த்துரையையும், செந்தமிழ்ச் சொல்லருவி ச.லலீசன் தலைமையுரையையும் நிகழ்த்தினர்.

சுன்னாகம் ஸ்கந்தவரோதயக் கல்லூரியின் ஆசிரியரும், இந்துசமய ஆன்மீகப் பிரசாரகருமான செல்வி.கனகதுர்க்கா கனகரத்தினம் “நாவலர் வழி” எனும் தலைப்பில் நினைவுப் பேருரை வழங்கினார்.

சுன்னாகம் வாழ்வகத்தைச் சேர்ந்த உயர்தர மாணவன் சந்திரகுமார் அமலசாம் “நடையில் நின்றுயர் நாயகன் நாவலன்” எனும் தலைப்பிலும், யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் உயர்தர மாணவன் ஜெயபாலன் தவேதன் “எழுந்த கொழுங்கலல்” எனும் தலைப்பிலும் உரைகள் நிகழ்த்தினர்.மேற்படி நிகழ்வில் இலங்கை சிவசேனை அமைப்பின் தலைவர் மறவன்புலவு க.சச்சிதானந்தன், யாழ்ப்பாணத் தமிழ்ச் சங்கத்தின் உபதலைவரும், யாழ்.மாநகரசபை உறுப்பினருமான சொல்லின் செல்வர் இரா.செல்வவடிவேல், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சமஸ்கிருதத்துறைத் தலைவர் கலாநிதி ம.பாலகைலாசநாத சர்மா, யாழ்ப்பாணப் பல்கலைக்கழக இந்துநாகரீகத்துறையின் தலைவர் கலாநிதி ச.முகுந்தன், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கல்வியியற்துறை விரிவுரையாளரும், யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கத்தின் செயலாளருமான இ.சர்வேஸ்வரா, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளர் பேராசிரியர் செல்வரட்ணம், கோப்பாய் ஆசிரிய பயிற்சிக் கலாசாலையின் சிரேஷ்ட விரிவுரையாளரும், யாழ்ப்பாணத் தமிழ்ச் சங்கத்தின் ஆட்சிக் குழு உறுப்பினருமான கு.பாலஷண்முகன், யாழ்ப்பாணத் தமிழ்ச் சங்க ஆட்சிக் குழு உறுப்பினர் ச.கருணாகரன், யாழ்.மாநகரசபை உறுப்பினர்களான வரதராஜன் பார்த்தீபன், சிவகாந்தன் தனுஜன்,யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஆட்சிக் குழு உறுப்பினர்கள், சமய, தமிழ் ஆர்வலர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

இதேவேளை, குறித்த நிகழ்வில் கலந்து கொண்ட அனைவருக்கும் “சைவமும் தமிழும் எனது இரு கண்கள்” எனப் பொறிக்கப்பட்ட ஆறுமுகநாவலரின் அழகிய திருவுருவப்படம் யாழ்ப்பாணத் தமிழ்ச் சங்கத்தினரால் இலவசமாக வழங்கி வைக்கப்பட்டமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

 

 

 

நிகழ்வின் வீடீயோப் பதிவைக் காண…

https://fb.watch/9zRIoT0Vzs/

சைவத் தமிழின் செழுமையைப் பேண உழைத்த பெருந்தகை சைவப்புலவர் சு.செல்லத்துரை

சைவப்புலவர் சு.செல்லத்துரை ஐயா அவர்கள் அமரத்துவம் அடைந்த செய்தியறிந்து யாழ்ப்பாணத் தமிழ்ச் சங்கம் ஆழ்ந்த துயரம் அடைகின்றது. எமது சைவத் தமிழின் செழுமைக்காக தன்னை அர்ப்பணித்துச் செயற்பட்ட ஆற்றலாளர் அமரர் அவர்கள். பாரம்பரியக் கல்வி முறைகளுக்குள்ளால் தமிழையும் சைவத்தையும் கற்றுத் தேர்ந்த சைவப்புலவர் சு.செல்லத்துரை அவர்கள் தான் கற்றுவந்த பாதைகளின் ஊடாகவே தமிழைப் பாதுகாப்பதிலும் பங்களிப்புச் செய்தவர். ஈழமண்ணில் தமிழ் நிலைத்திருப்பதற்கு சைவத்தின் வியாபகம் அவசியமானது எனும் பெரும் உண்மையை உணர்ந்து கொண்ட அவர் தமிழையும் சைவத்தையும் இணைத்துப் பல அறிவுக் காரியங்கள் ஆற்றினார்.
ஈழ மண்ணை சிவபூமி என விளித்த திருமூலர் மீதும் அவர் தந்த திருமந்திரம் மீதும் அளவற்ற பற்றும் ஆழ்ந்த புலமையும் கொண்டிருந்த அவர் தமிழ் மந்திரமாகிய திருமந்திரத்தை அறிவுப் பாரம்பரியத்தினூடாக தலைமுறைக் கையளிப்புச் செய்வதற்கு தன்னாலியன்ற பங்களிப்பை நல்கியவர். தொழில்சார்ந்து ஆசிரியராக அதிபராக கல்வித்துறையில் பணியாற்றிய அவர் நேர்ந்திமிக்க நிர்வாகப் பண்புகளாலும் இளையவர்களை தட்டிக் கொடுத்து அழைத்துச்செல்லும் தலமைத்துவத்தினாலும் தனது கல்வியியல் தலமைகளை அழகுபடுத்தியவர்.
சைவப்புலவர் சங்கத்தின் மூத்த தலைமகனாகவிருந்து பல இளம் சைவப்புலவர்களையும் சைவப்புலவர்களையும் உருவாக்கியவர். ஒரு பாரம்பரியக் கல்வி முறை முற்றுப்பெற்று போய்விடாது தொடர்வதற்கு காலமாற்றத்துக்கு ஏற்ற விதத்தில் தன்னை இசைவுபடுத்தி இக் கல்விமுறையை நிலைத்திருக்க செய்த பெருமனிதர் அவர். அவரது தமிழியல் பங்களிப்புக்கள் பல தளப்பட்டவை. நூலாக்கப்பணிகள், மீள்பதிப்புக்கள், ஆராய்ச்சிகள், மற்றும் அறிவுப்பரவலாக்கம் என நீண்ட அவரது தமிழியல் பணிகள் காலத்தால் என்றும் நினைவுகூரத்தக்கன.
பழகுவதற்கு இனிய பண்பாளனாகவும், நீறணிந்த நெற்றியனாகவும் என்றும் திகழ்ந்த அவர் சைவசிந்தாந்த துறையில் நமது மண்ணில் இருந்த ஆழ்ந்த புலமைமிக்க பாரம்பரிய அறிவுக்குழாத்தின் கடைசித் தலைமுறையின் பிரதிநிதியாகக் கொள்ளத்தக்க தகமையைக் கொண்டிருந்தார். சைவச் சொற்பொழிவுத் துறையிலும் முக்கிய கர்த்தாவாகவிருந்த அவரது குரல்வாண்மையும் குரல்கலாசாரமும் தனித்துவமானது. பௌராணிகர் மரபும், ஓதுவார் மரபும் நலிவுறும் தற்போதைய சூழலில் அத்துறை சார்ந்து இளையவர்களை ஆற்றுப்படுத்திய முன்னுதாரண மனிதர் அவர்.
இத்தகையை காலக்கடமைகளை கச்சிதமாக ஆற்றி நமது சைவத் தமிழின் இருப்புக்கு தக்கவை செய்த தகமையாளர் சைவப்புலவர் சு.செல்லத்துரை அவர்களின் மறைவு அவர் விசுவாசித்த திருமந்திர நாயகர் திருமூலர் அவர்களின் குருபூசைத் தினத்தில் நிகழ்ந்தமை இயற்கை அவருக்கு அளித்த பெரும் தகமைச் சான்றிதழ். அமரரின் பிரிவு தமிழ் உலகில் இடைவெளி தரும் பிரிவு என்பதை உணர்வோம். அமரரது ஆத்மா சாந்திக்கு பிரார்த்திப்பதுடன் ஈழத்தமிழ் மக்கள் சார்பில் யாழ்ப்பாணத் தமிழ்ச் சங்கத்தின் அஞ்சலிகளையும் தெரிவிக்கின்றோம்.

தமிழ்க் கடவுள் ஆலயத்தின் தலைமகனுக்கு தமிழ்ச் சங்கத்தின் அஞ்சலி

நல்லூர் கந்தன் ஆலயத்தின் தலமை நிர்வாகி குமாரதாஸ மாப்பாண முதலியார் இயற்கை எய்திய செய்தி உலகம் வாழ் தமிழ் மக்களுக்கு கவலை தரும் செய்தி. அவரது வாழ்வும் அவ் வாழ்வில் அவர் கடைப்பிடித்த நெறிமுறையும் யாழ்ப்பாண தமிழர்களின் வரலாற்றை எழுதும் போது தனித்தன்மை மிக்க அடையாளமாகத் திகழும். தமிழர்கள் தங்கள் தாய்ப்பூமியின் தலைநகராக யாழ்ப்பாணத்தையும் அதன் இதயமாக நல்லூரையும் கொண்டாடவிளையும் மற்றும் ஆவணப்படுத்தும் எண்ணங்களுக்கு சொல்லிலும் செயல் பெரிது என பல செயற்கரிய செயல்களை ஆற்றியவர் அமரர் அவர்கள்.
கட்டக்கலை மரபுகளாலும் வழிபாட்டு முறைகளின் தனித்துவங்களினாலும் நல்லூர் எங்கள் தமிழ்க் கடவுள் முருகனின் ஆலயம் ஈழத் தமிழர்களின் அடையாளம் என உலகத் தமிழர்கள் பெருமைகொள்ள உரிய வழிவகைகளைச் செய்து வைத்தவர் மாப்பாணர் அவர்கள். நேரம் தவறாமை, நேர்த்தியான திட்டமிடல், ஆண்டவன் முன் அனைவரும் சமம் எனும் சிந்தை, தோற்றத்தில் எளிமை, தன்முனைப்பற்ற தலமைத்துவம் என பன்முக ஆளுமைகளைக் கொண்ட தலமைத்துவ உதாரணமாகக் கற்றுக்கொள்ள வேண்டிய காலப்பாடம் ஒன்றை நாம் இன்று இழந்துள்ளோம்.
கரையற்ற வெள்ளை வேட்டிக் கலாசாரத்தை நம் தமிழர்களிடம் புகுத்தியவர் அக் கறையற்ற மனிதன் என்பது கண்கூடு நாம் கண்ட நிதர்சன உண்மை. தலைமுறை இடைவெளி எனும் முகாமைத்துவ சிக்கல் அற்று இயல்பாக நேர்த்தியாக பொறுப்புக்களை அனுபவங்களின் வழி தலைமுறைக் கையளிப்புச் செய்த அவரது ஆற்றல் என்றும் சிலாகித்து நினைக்கவல்லது. மூன்று தலைமுறைகள் ஒன்றாக நின்று இறைகாரியம் ஆற்றிய பொழுதுகளை காணும்போது மிக்க நெகிழ்ச்சியாகவிருக்கும். இன்று அத் தலைமுறையின் முதல்பெருமகனை இழந்துள்ளோம்.
தன் முடிவுகளை எவருக்காகவும் விட்டுக்கொடுக்காத தலமைத்துவ ஆற்றல் எல்லோருக்கும் வாய்ப்பதில்லை. அவ் ஆற்றல் வாய்த்த தலைவரின் பின்பற்றுனர்களாக இருக்கும் வாய்ப்பும் இலகுவில் எல்லோருக்கும் வாய்;ப்பதில்லை. இவ்விரண்டையும் யதார்த்தமாக்கிய வாழ்வியல் நல்லைக் கந்தன் ஆலயத்தில் நிகழ்ந்தேறியது. முருகனின் கட்டளைப்படி காரியங்கள் ஆற்றுகின்றேன் எனும் ஒற்றை முடிவுடன் பல செயல்களைச் செய்த பெருமகன் குமாரதாஸ மாப்பாண முதலியார்.
தூரநோக்குச் சிந்தனையுடன் அவர் நல்லூர் ஆலயத்தை மையப்படுத்தி ஆற்றிய பல காரியங்கள் ஈழத் தமிழர்கள் வரலாற்றின் அடையாளங்களாக என்றும் பேசப்படும். தமிழர்களின் தனித்துவ அடையாளமாக முன்னைய இராசதானி நல்லூரை மாற்றிய பெருமனின் பெருவாழ்வை வியந்து அவரது பிரிவால் துயருற்று உலகம் வாழ் யாழ்ப்பாணத் தமிழர்கள் சார்பில் எமது அஞ்சலிகளைத் தெரிவிக்கின்றோம்.

இணையவழியில் தமிழ்ச்சங்கம் நடத்தும் ஆடிப்பிறப்பு விழா

யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கம் இணையவழியில் நடத்தும் ஆடிப்பிறப்பு விழா இன்று (17.07.2021) இரவு 8 மணிக்கு சூம் செயலி வழியாக நடைபெறவுள்ளது.
தமிழ்ச்சங்கத் தலைவர் செந்தமிழ்ச்சொல்லருவி ச.லலீசன் தலைமையில் நடைபெறவுள்ள இந்நிகழ்வில் சியன தேசிய கல்வியியற் கல்லூரி விரிவுரையாளர் துணவியூர் சி. கேசவன், ஆடிப்பிறப்பின் மகத்துவம் என்ற பொருளில் சிறப்புரை ஆற்றுவார். தமிழ்ச்சங்கத்தின் ஆட்சிக் குழு உறுப்பினர் கு. பாலசண்முகன் வரவேற்புரையையும் செயலாளர் இ.சர்வேஸ்வரா நிறைவுரையையும் வழங்கவுள்ளனர். நிகழ்வில் இணைந்து கொள்வதற்கான அடையாள எண்- 673 6217 6791 கடவுச்சொல் – Tamil@123
 

உலகத்திசைகளுக்கு தமிழர் பாரம்பரிய கலைவடிவங்களைக் காவிச்சென்றவர் கலைத்தூது கலாநிதி மரியசேவியர் அடிகளார்

கலைத்தூது மரியசேவியர் அடிகளார் மறைந்து விட்டார் எனும் செய்தி மிகப் பெரும் கவலையாக ஈழத்தமிழ்ச் சமூகத்தில் பரவிநிற்கின்றது. திருமறைக் கலாமன்றம் எனும் அமைப்பைத் தாபித்து அதன் மூலம் உலகின் பல பாகங்களுக்கும் தமிழர்களின் கலைவடிவங்களை காவிச் சென்றவர் கலைத்தூது மரியசேவியர் அடிகளார். தனது நிர்வாகத் திறத்தினாலும் கலையாற்றலினாலும் திருமறைக் கலாமன்றம் எனும் காத்திரமான தனித்துவமான ஒரு கலைஅமைப்பை நிறுவி ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக அவ் அமைப்பை தளராது முன்னோக்கி வளர்ச்சிப் பாதையில் அழைத்துச் சென்ற தனித்துவம் ஈழத்தின் கலையுலக மரபில் அவருக்கே உரித்தான தனித்துவம்.
அவரால் உருவாக்கப்பட்ட பல கூத்துருவ நாடகங்கள் நூற்றாண்டுகள் கடந்த வரலாற்றுச் சம்பவங்களை மையமாக வைத்து எமது இனம் அண்மையில் சந்தித்த வலிகளைக் குறியீடுகளாக்கிப் பேசும் தனித்துவ வல்லமையைக் கொண்டிருந்தமையை அவரது கலைப்படைப்புக்களை உன்னிப்பாக கவனிக்கும்போது அவதானிக்கக்கூடிய விடயம். கலையுடன் வாழ்தல், கலைக்காக வாழ்தல், என்பவற்றை தன் வாழ்வின் இலட்சியங்களாக வரித்துக்கொண்ட இவர் இறுதிக் கணம் வரை கலைக்காகவே வாழ்ந்தார். குறிப்பாக கிறிஸ்தவ மக்களின் தவக்காலம் எனும் புனிதநாள்களில் யேசு பிரானின் திருப்பாடுகளின் காட்சிகளை நாடகங்களாக வருடம் தோறும் உருவாக்கிய அருட்தந்தை மரியசேவியர் அடிகளார் அவர்கள் அத் தவக்கால நாள்களில் ஒன்றிலேயே தன் மண்ணுலக வாழ்வைத் துறந்தமை மாண்புக்குரிய விடயம்.
மரியசேவியர் அடிகளாரின் முதன்;மைப்பண்பாக இருந்தது, தான் ஒரு கிறிஸ்தவர் என்பதை முதன்மைப்படுத்துவதற்கு முன்னால் தன்னை ஒரு தமிழராக என்றும் முன்னிலைப்படுத்தவேண்டும் என்பதாகவேயிருந்தது. இத்தகைய பண்பு இன்று பலருக்கும் எடுத்துக்காட்டான பண்பாகும். அதற்கு இலக்கணமாக அவர் சைவசிந்தாந்தத்துறையில் கொண்டிருந்த ஆழ்ந்த ஈடுபாட்டையும் ஆழமான புலமையையும் குறிப்பிடமுடியும். சைவசித்தாந்த துறையில் கலாநிதிப்பட்டம் பெற்ற அவர் அத் துறைசார்ந்த ஆராய்ச்சிக் கட்டுரைகள் பலவற்றையும் ஆங்கிலத்தில் சர்வதேச அறிஞர்களின் கவனத்துக்கு கொண்டுபோய்ச் சேர்த்தார்.
இன மத நல்லிணக்கத்தின் வடிவமாக கலைகளைக் கையாண்ட பெருமையும் அடிகளாரைச் சாரும். சிங்கள மக்களின் கவைவடிவங்களைப் பயிலும் ஆர்வத்தை தமிழர்களிடமும் தமிழர்களின் கலை வடிவங்களைப் பயிலும் ஆர்வத்தை சிங்கள இளையவர்களிடமும் விதைத்தவர் அவர். இவ்வாறு பல்வேறு வழிகளில் முன்னுதாரணமாகச் செயற்பட்ட அவர் தமிழர்களின் கலைவடிவங்கள் பெரும்பாலானவற்றை காலம்கடத்தும் கடத்துவதற்காக நிறுவனக் கட்டமைப்புக்களைத் தாபித்து அவற்றை ஸ்திரப்படுத்தியவர்.
எமது யாழ்ப்பாணத் தமிழ்ச் சங்கம் மீதும் அதன் பணிகள் மீதும் அளவுகடந்த மரியாதை கொண்டிருந்த மரியசேவியர் அடிகளாரின் மறைவுக்கு யாழ்;ப்பாணத் தமிழ்ச் சங்கத்தின் சார்பில் எங்கள் அஞ்சலிகளைச் செலுத்துகின்றோம்.

தமிழர் இசைவடிவத்தின் காவலரான கணபதிப்பிள்ளை ஐயா காலத்தால் மறக்கமுடியாத கலைப் பொக்கிசம்

ஈழத்தமிழர்களின் இசைப்பாரம்பரியத்தின் குறிப்பிடத்தக்க விற்பன்னராகத் திகழ்ந்த சங்கீதபூசணம் கணபதிப்பிள்ளை ஐயா காலமான செய்தி கவலைதரும் விடயமாகவுள்ளது. யாழ்ப்பாணத் தமிழர்களின் கலைப்பாரம்பரியத்தில் குறிப்பாக இசைப்பாரம்பரியத்தில் கணபதிப்பிள்ளை ஐயாவுக்கு காத்திரமான இடமுண்டு. இசைத்துறைக்காக அத்துறை சார்ந்த கலைஞராகவும் கல்வி நிர்வாகியாகவும் அவர் ஆற்றிய பணிகள் அற்புதமானவை. இன்று எமது மண்ணில் இசைத்துறையைப் போதிக்கும் இசையாசிரியர்கள் பலர் அவருக்கு ஏதொவொரு வகையில் நன்றிக்கடன் பட்டவர்களாகவேயிருப்பார்கள்.
வட இலங்கை சங்கீத சபையின் பணிகளில் வினைத்திறனுடன் பணியாற்றிய அவர் இசைத்துறை சார்ந்த பல கலைஞர்களை உருவாக்கினார். அத்துடன் இசைத்துறையின் உதவிக் கல்விப் பணிப்பாளர் எனத் தான் வகித்த உயர்பதவியின் வழி இசைத்துறை ஆசிரியர்களின் வாண்மைத்துவ விருத்திக்காக பல செயற்றிட்டங்களை வகுத்துச் செயற்படுத்தியவர் அவர். ஒர் அரங்க இசைக்கலைஞர் அரங்கை ஆளுகை செய்வதற்கு எத்தகைய பண்புகளையும் திறன்களையும் கொண்டிருக்க வேண்டும் என்பதை தன் வாழ்க்கையின் மூலம் வாழந்து காட்டியவர் கணபதிப்பிள்ளை ஐயா. நீண்ட தொடர்ச்சித்தன்மைமிக்க மாணவப் பாரம்பரியத்தை தன் இசைத்துறையில் உருவாக்கியிருப்பவர் கணபதிப்பிள்ளை ஐயா.
கர்நாடக சங்கீதத்துறையின் உச்ச நிலை விற்பன்னராகத் திகழ்ந்த அவர் அதனூடாக தமிழிசையையும் வளர்க்கும் திடசங்கற்பத்தையும் கொண்டிருந்தார். இசைத்துறை அரங்குகளில் தமிழிசைக்கு அவர் முக்கியத்துவம் கொடுத்துச் செயற்பட்டார். இன்று பலரும் தமிழிசையின் மரபுத் தொடர்ச்சி குறித்துப் பேசும் போது அதனைச் செயலில் காண்பித்த செயற்றிறன்மிக்கவராக கணபதிப்பிள்ளை ஐயா திகழ்ந்தார்.
இவரது மறைவு இசைத்துறைக்கு மட்டுமன்றி ஈழத்து கலையுலகுக்குமே ஈடுசெய்ய முடியாத இழப்பு. அமரரது ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்தித்து யாழ்ப்பாணத் தமிழ்ச் சங்கத்தின் அஞ்சலிகளைச் செலுத்துகின்றோம்.

உலகத் தமிழ்ச்சங்கத்தின் இலக்கண விருது பெறுகிறார் பேராசிரியர் அ.சண்முகதாஸ்

 

தமிழ் நாடு அரசு உலகத் தமிழ்ச்சங்கம் மதுரையின் சார்பில் இலக்கியம், இலக்கணம் மற்றும் மொழியியல் துறைகளில் சிறந்து விளங்கும் அயலகத் தமிழறிஞர்கள் மூவருக்கு ஆண்டு தோறும் உலகத் தமிழ்ச்சங்க விருதுகள் வழங்கப்படுகின்றன.

அதன் அடிப்படையில் 2020 ஆம் ஆண்டிற்கான உலகத் தமிழ்ச் சங்க இலக்கண விருது யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கப் பெருந்தலைவரும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வாழ்நாள் பேராசிரியருமாகிய பேராசிரியர் அ.சண்முகதாஸ் அவர்களுக்கு வழங்கப்படவிருக்கிறது.
இவ்விருது வழங்கும் விழா விரைவில் நடைபெறவுள்ளதாகவும் தமிழக முதலமைச்சர் விருதைக் கையளிக்கவுள்ளதாகவும் உலகத் தமிழ்ச்சங்கத்தின் இயக்குநர் முனைவர் தா.லலிதா அறிவித்துள்ளார்.
இலக்கண விருது பெறும் யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கப் பெருந்தலைவர் பேராசிரியர் அ.சண்முகதாஸ் அவர்களுக்கு இனிய நல்வாழ்த்துகள்
 

தமிழ்ச்சங்க ஏற்பாட்டில் பிள்ளைத் தமிழ் நூல் வெளியீடு

புலவர்மணி வை.க. சிற்றம்பலம் எழுதிய இணுவில் சிவகாமியம்மை பிள்ளைத் தமிழ் என்ற நூலின் வெளியீட்டு நிகழ்வு இன்று 27.02.2021 சனிக்கிழமை பிற்பகல் 4 மணிக்கு திருநெல்வேலி யாழ். பல்கலைக்கழகத்திற்கு முன்பாக உள்ள அறிவாலயம் அரங்கில் இடம்பெற்றது.
யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வுக்கு தமிழ்ச்சங்கத்தின் பெருந்தலைவர் பேராசிரியர் அ.சண்முகதாஸ் தலைமை தாங்கினார். விரிவுரையாளர் கு.பாலசண்முகன் தமிழ்த்தாய் வாழ்த்து இசைத்தார். தமிழ்ச்சங்கச் செயலர் விரிவுரையாளர் இ.சர்வேஸ்வரா வரவேற்புரையாற்றினார்.
தமிழ்ச்சங்கத் தலைவர் ச.லலீசன் தொடக்கவுரை ஆற்றினார். பேராசிரியர் எஸ். சிவலிங்கராசா நூல் பற்றிய நயப்புரையை ஆற்றினார். புலவரின் ஆர்வலர்கள் நிகழ்வில் பங்கேற்றனர்.
புலவர் வை.க. சிற்றம்பலம் இணுவிலில் பிறந்தவர். அளவெட்டியைத் தமது புக்ககமாகக் கொண்டிருந்தார். 1914 இல் பிறந்த இவர் 2015 வரை (101 வயது வரை) வாழ்ந்தார். முப்பதுக்கும் மேற்பட்ட பிரபந்த (சிற்றிலக்கிய) நூல்களை ஆக்கியுள்ளார்.

தமிழ்ச் சங்கத்தின் அஞ்சலிகள்.

யாழ்ப்பாணத் தமிழ்ச் சங்கத்தின் முன்னாள் தலைவரும் இந்நாள் பொருளாளரும், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ வணிக கற்கைகள் பீட முன்னாள் பீடாதிபதியுமான சிரேஸ்ட பேராசிரியர் தி.வேல்நம்பி அவர்களின் அன்புத் தாயார் யோகமணி திருநாவுக்கரவு இன்று செவ்வாய்க்கிழமை காலை 08.04.2020 காலமானார்.
10.04.1942 இல் புத்தூரில் பிறந்த இவர் தற்போது பிள்ளைகளுடன் வசித்து வந்தார். திருநெல்வேலியில் பேராசிரியர் வேல்நம்பியின் இல்லத்திலும் தொடர்ந்து நீர்வேலியில் மகளின் இல்லத்திலும் வசித்தார்.
இவரின் இறுதிக் கிரியைகள் நாளை 09.09.2020 புதன்கிழமை காலை 10 மணிக்கு காமாட்சி அம்பாள் கோவிலடி, நீர்வேலி வடக்கு நீர்வேலியில் உள்ள அவர்களது இல்லத்தில் இடம்பெறவுள்ளது.
தாயாரின் இழப்பினால் துயருற்றிருக்கும் யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கத்தின் பொருளாளரான பேராசிரியர் தி.வேல்நம்பி அவர்களுக்கும் அவர்தம் குடும்பத்தினர் அனைவருக்கும் தமிழ்ச்சங்கத்தார் சார்பில் ஆறுதலைத் தெரிவிப்பதுடன் அன்னாரின் ஆன்மா சாந்தியடையப் பிரார்த்திக்கின்றோம்.