யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கத்தின் பொதுச்சபைக்கூட்டம் கடந்த 08.05.2016 ஞர்யிற்றுக்கிழமை காலை 9 மணிக்கு யாழ். நீராவியடியில் உள்ள சைவபரிபாலனசபை மண்டபத்தில் சங்கத் தலைவர் பேராசிரியர் தி.வேல்நம்பி தலைமையில் நடைபெற்றது. இதன்போது செயலாளர் இரா. செல்வவடிவேல் 2012 – 2016 ஆண்டு காலப்பகுதிக்கான செயலாளர் அறிக்கையை வாசித்தார். இதன் பிரதி சங்க அங்கத்தவர்களுக்கு வழங்கப்பட்டது. அதில்சில திருத்தங்கள் மேற்கொள்ளப்படவேண்டும் என்ற கோரிக்கைவிடப்பட்டதைத் தொடர்ந்து திருத்தங்களுடன் அறிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டது.
அதனை அடுத்து பொருளாளர் ச.லலீசன் 2012 – 2016 காலப்பகுதிக்குரிய பெறுவனவுகள் கொடுப்பனவுகள் கணக்கறிக்கையை சமர்ப்பித்தார். இதன் அச்சுப்பிரதிகளும் வழங்கப்பட்டிருந்தன. அந்தக் கணக்கறிக்கை சபையால் ஏற்றுக்கொள்ளப்பட்டதையடுத்து தலைவர் பேராசிரியர் தி.வேல்நம்பி தங்கள் பணிக்காலத்தில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கிய அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்தார்.
தொடர்ந்து பெருந்தலைவர் பேராசிரியர் அ. சண்முகதாஸ் தலைமையில் புதிய நிர்வாகத் தெரிவு இடம்பெற்றது. சங்கத்திற்கு நிதி திரட்டுதல் மற்றும் பாடசாலை மட்டங்களில் விழாக்களை முன்னெடுத்தல் தொடர்பில் உபகுழுக்களும் அமைக்கப்பட்டன. புதிய நிர்வாகம் பற்றிய விபரம் விரிவான செய்தியாக இடம்பெற்றுள்ளது.









